பள்ளிக்குள் உலாவரும் பாம்புகளால் குழந்தைகள் அச்சம்
பள்ளிக்குள் உலாவரும் பாம்புகளால் குழந்தைகள் அச்சம்
UPDATED : டிச 05, 2014 12:00 AM
ADDED : டிச 05, 2014 01:20 PM
திருப்பூர்: பள்ளிக்குள் உலா வரும் பாம்புகளால், குழந்தைகள் அச்சத்துக்கு உள்ளாகின்றனர்; தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் தேவங்காபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. 1929ல் துவங்கப்பட்ட இப்பள்ளியில், லட்சுமி நகர், ராம்நகர், பிரிட்ஜ்வே காலனி, காலேஜ் ரோடு பகுதிகளை சேர்ந்த 230 குழந்தைகள் படிக்கின்றனர். 80 ஆண்டுகளை கடந்தும், இப்பள்ளி ஓட்டுக்கட்டடத்தில் இயங்கி வருகிறது. ஓடுகள் மீதும், பள்ளி வளாகத்திலும் குப்பை, மரத்தில் இருந்து உதிர்ந்த இலை, காய்ந்த சறுகுகள் காணப்படுகின்றன.
கடந்த வாரம் தண்ணீர் தொட்டி அருகே ஒரு பாம்பு வந்தது. நேற்று முன்தினம், பள்ளி வளாகம் பின்புறம் உள்ள அங்கன்வாடி அருகே ஒரு பாம்பும், நேற்று பள்ளி இறை வழிபாட்டு கூட்டம் நடக்கும் இடத்தில், ஒரு சிறிய பாம்பும் வந்துள்ளது. தினமும் ஒரு பாம்பு வருவதால், குழந்தைகள் அச்சத்துடன் வகுப்பறையில் அமர்ந்திருக்கின்றனர்.
பெற்றோர் கூறுகையில், "பள்ளி வளாகத்துக்குள் பெரிய பாம்பு இருக்கு; அதன் குட்டிகள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன. பள்ளி வளாகம், வகுப்பறை, ஓடுகளில் தேங்கியுள்ள குப்பையை சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், தாமதிக்காமல், மாஸ் கிளீனிங் பணியை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும், என்றனர்.
