UPDATED : ஜன 08, 2015 12:00 AM
ADDED : ஜன 08, 2015 12:29 PM
சென்னை: திருச்சி அருகே சித்தா டாக்டர் ஆஷாபானு மீது போலீசார், ’போலி டாக்டர்’ என, வழக்கு பதிந்துள்ளனர். இதைக் கண்டித்து, இந்திய சித்த மருத்துவர்கள் சங்கத்தினர், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கவுன்சில் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, ஏராளமான சித்தா டாக்டர்கள் இதில் பங்கேற்றனர். சங்கத் தலைவர் செல்வின் கூறியதாவது: டாக்டர் ஆஷாபானு, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில், பி.எஸ்.எம்.எஸ்., முடித்து, தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலிலும் பதிவு செய்துள்ளார்.
முன்விரோத அடிப்படையில் கொடுத்த புகாரை சரியாக விசாரிக்காமல், போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர். பி.எஸ்.எம்.எஸ்., முடித்த அனைவரும், சித்தா டாக்டர்கள் தான்; போலி டாக்டர் அல்ல. இது தொடர்பாக, அதிகாரிகள் மட்டத்தில் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது குறித்து, சுகாதாரத் துறை செயலர், பதிவாளர், உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு கடிதம் கொடுத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
