UPDATED : நவ 30, 2015 12:00 AM
ADDED : நவ 30, 2015 11:01 AM
தினமலர் கல்வி மலர் சார்பில், டி.வி.ஆர்., அகாடமியின், ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி, கோவை அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்தது.
இரண்டாம் நாளான நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கான துறை வல்லுனர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் விளக்கமளித்தனர்.
திட்டமிட்டு
படியுங்கள்
அனைத்து பாடங்களின் உட்கருத்தையும் புரிந்து கொண்டு, படிப்பது நல்லது. முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள்களை நன்கு பயிற்சி பெற வேண்டும். இவற்றை கொண்டு மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும். கருத்துக்கள் புரியாத பாடங்களில் உள்ள சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அனைத்து பாடங்களையும் எழுதி பழகும் போது மதிப்பெண்கள் குறையாது. எந்த ஒரு பாடத்தையும் விட்டு விடக் கூடாது. ஒரு மதிப்பெண் கேள்விகளில் எளிதாக முழு மதிப்பெண்களை பெறலாம். இரண்டு, ஐந்து மதிப்பெண் கேள்விகளில் சாய்ஸ் குறித்து முதலிலேயே திட்டமிடுங்கள். கேள்விகளுக்கான பதில்களை எதிர்கொள்ள, திட்டமிட்டு தயாராக வேண்டும்.
தேர்வு பயம்
பயிற்சியால் நீங்கும்
இயற்பியல், வேதியியல் பாடங்கள் போல் தாவரவியல் பாடத்துக்கும் முக்கியத்துவம் உள்ளது. உயிரியியல் என்பது எளிதில் மதிப்பெண்கள் பெற்றுத்தரும் ஒரு பாடம். உயிரியியல் பாடம் பயில்பவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தாவர செயலியல் பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அதிக மதிப்பெண் பெற முடியும். படங்களை பலமுறை வரைந்து பயிற்சி செய்வது அவசியம். பொதுத்தேர்வுக்கு முன், ஐந்து பழைய கேள்வித்தாள்களை எழுதி பயற்சி செய்தால், தேர்வு மீதுள்ள பயம் நீங்கும். தன்னம்பிக்கை பிறக்கும்.
காலம் பொன்
போன்றது
காலத்தை விரயம் செய்யாமல் விரைவாக, அதே சமயம் கவனமாக பதில் அளிப்பது அவசியம். பாடங்கள் வாரியாக படிக்காமல், கேள்விமுறையை பயன்படுத்தி படிப்பது சிறந்தது. இதன் மூலம் முழு மதிப்பெண்கள் கிடைக்கும். தேர்வுக்கு தயாராகும் போது, 10 மதிப்பெண் வினாக்கள் எந்தெந்த பாடங்களில் இருந்து கேட்கப்படும் என்பதை தெரிந்து கொண்டு தயாராக வேண்டும். ஐந்து பாடங்களை தேர்வு செய்து அதில் உள்ள அனைத்து, 10 மதிப்பெண் கேள்விகளையும் கட்டாயம் படிக்க வேண்டும். இதேபோல், இரண்டு மற்றும் ஏழாம் பாடங்களில் உள்ள ஐந்து மதிப்பெண் கேள்விகள் அனைத்தையும் படிக்க வேண்டும். இதை செய்யும்போது முழு மதிப்பெண்கள் எளிதில் பெறலாம். அனைத்து கேள்விகளையும் சந்தேகமின்றி படிப்பது சிறந்தது. கட்டாய கணக்குகளுக்கு புத்தகத்தில் உள்ள தீர்வு வழங்கப்பட்ட மற்றும் பயிற்சி கணக்குகளில் ஏதாவது ஒன்றை பயிற்சி செய்தால் போதும்.
ஆங்கிலத்தில்
அசத்துவது எளிது!
இலக்கணப்பகுதிகளை புரிந்துகொண்டு பயிற்சி செய்யவேண்டும். குறிப்பாக, ஆறாம் பாடத்தின் பின்பு உள்ள பகுதிகளை கவனமாக படிக்கவேண்டும். பத்தி கேள்வி பிரிவுகளுக்கு, ஒரு பத்தியில் மட்டுமே பதிலளிக்கவேண்டும்.பொது கட்டுரை பகுதியில், சொந்த நடையில் எழுதுதல், அறிவியல், சமூகம் என்ற மூன்று வகைகளில் மட்டுமே, கேள்விகள் அமையும். தேர்வுக்கு செல்லும் முன்பே, எந்த பிரிவு நமக்கு எளிமையாக இருக்குமோ அதற்கு ஏற்ப, நம்மை தயார்படுத்திக்கொள்ளவேண்டும். தேர்வு எழுதும் பொழுது, இரண்டு நிமிடம் தேர்வு செய்த கேள்விக்கு என்னென்ன தகவல்களை எழுதலாம் என சிந்தித்து எழுதவேண்டும்.
பிற பாடங்களை காட்டிலும், ஆங்கில பாடத்தில் பாடத்திட்டங்கள் குறைவு அதிக நேரம் இருக்கும். எனவே, நிதானமாக தெளிவான கையெழுத்துடன் தேர்வு எழுதவேண்டும்.
இலக்கண பயிற்சி
அவசியம்!
தமிழ் பாடம் மாணவர்களுக்கு நேர்மறை எண்ணங்களுடன், தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. எளிமையாக புரிந்துகொள்ள இயலும். பெரும்பாலான மாணவர்கள், கவனக்குறைபாடால் எழுத்துப்பிழை அதிக அளவில் செய்து கணிசமான மதிப்பெண்களை இழக்கின்றனர். பிழைகள், அடித்தல் திருத்தல் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும். பெரும்பாலான மாணவர்கள், &'கட்-ஆப்&' என்பதற்கு முக்கியத்துவம் அளித்து, தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களை இறுதிகட்ட நேரத்தில் படிக்க துவங்குகின்றனர். இதனால், மொத்த மதிப்பெண்கள் குறைகிறது. பிற பாடங்களை போன்று தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் அளித்து படிக்கவேண்டும். இலக்கணப்பகுதிக்கு பயிற்சிகளை மேற்கொண்டால் எளிமையாக இருக்கும்.
பொதுவாக மாணவர்கள் இரண்டாம் தொகுதியை அதிக கடினம் என, எண்ணுகின்றனர். முதல் தொகுதிக்கு முக்கியத்துவம் அளித்தாலே, 150 மதிப்பெண்களுக்கு, 100 மதிப்பெண்கள் பெற்று விடலாம். சராசரி மாணவர்களுக்கு முதல் தொகுதியில் உள்ள &'எப்&' தொகுதி தனிமங்கள், திட நிலைமை, வெப்ப இயக்கவியல், வேதிச்சமநிலை, நடைமுறை வேதியியல், அணு அமைப்பு, தனிம வரிசை பாடங்களை படித்தாலே போதும். தேர்வில், 100 சதவீதம் பெற பொதுத்தேர்வுக்கு முன், 20 கேள்வித்தாள்களை எழுதி, பயிற்சி எடுக்க வேண்டும். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு புத்தகத்தில் உள்ள பயிற்சி கேள்விகளை படித்தால் போதும். கட்டாய கணக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். குறியீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து படிக்க வேண்டும்.
விலங்கியலில்
படங்கள் முக்கியம்
உயிர் விலங்கியல் பாடத்தில் சென்டம் பெறவேண்டுமானல் அதிக கவனம் செலுத்தி பாடங்களை படிக்கவேண்டும். முதல் பாடமான உடற்செயலியல் பாடத்தை முழுமையாக படித்தால், பல கேள்விகளுக்கு சிரமமின்றி, பதில் அளிக்கலாம். பாடங்களின் பின்பகுதியில், 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் உள்ளன.
இதை முழுமையாக படித்துக்கொள்வது அவசியம். மூன்று மதிப்பெண் கேள்விகளுக்கு, முதல் பாடம் தவிர்த்து மீதமுள்ள ஆறு பாடங்களை படிக்கவேண்டும். விலங்கியல் பாடத்தில், படங்கள் அதிக முக்கியத்துவம் கொண்டவை. படம் தெளிவாக வரைந்து பாகங்களை குறிக்கவேண்டும். சென்டம் எடுக்கும் ஆர்வமுள்ள மாணவர்கள், குறைந்தபட்சம், பத்து கேள்வித்தாள்களை கொண்டு சுயமாதிரி தேர்வுகளை எழுதவேண்டும், தங்களது விடைத்தாள்களை தாங்களாக திருத்திக்கொண்டு, எவ்விடத்தில் தவறு ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து அதனை சரிசெய்யவேண்டும்.
வாழ்கைக்காக
படியுங்கள்!
பொருளாதாரத்தில், 12 பாடங்கள் மட்டுமே உள்ளதால் படிப்பதில் எவ்வித சிரமமும் இருக்காது. குறிப்பாக, 10, 20 மதிப்பெண்களுக்கு பாடத்தின் பெரும்பாலான பகுதிகளை படிக்கவேண்டியிருக்கும். வரைபடங்கள் தேவைப்படும் கேள்விகளுக்கு கட்டாயம் வரைந்து விளக்கம் அளிக்கவேண்டும். தேவையற்ற இடங்களில் வரைபடங்களை தவிர்த்துவிடுங்கள். கடைசி இரண்டு பாடங்கள், வரி, பட்ஜெட் போன்றவை சராசரி மனிதனும் தெரிந்திருக்கவேண்டிய விஷயம். எனவே, தேர்வு, மதிப்பெண்களை கடந்து, வாழ்க்கைக்காக என நினைத்து படிக்கவேண்டும்.
தெளிவாக எழுதினால் மதிப்பெண் எளிது
கேள்விக்கு தொடர்பு இல்லாத பதில்களை எழுதினால், மதிப்பெண்கள் கிடைக்காது. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பது அவசியம். ஏதோ ஒன்றை எழுதினால், மதிப்பெண் கிடைக்கும் என்று, சில மாணவர்கள் தேவையற்ற பதில்களை எழுதி, நேரத்தை வீணடிக்கின்றனர். பதில்களை தெளிவாக எழுதினால், மதிப்பெண்களை எளிதாக பெறலாம். சென்டம் பெற வேண்டும் என முயற்சி செய்யும் மாணவர்கள், அனைத்து பாடங்களையும் முழுமையாக படிக்க வேண்டும். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு, பாடங்களின் உள்ளே இருந்து கேள்விகள் வரலாம். பழைய கேள்வித்தாள்களை நம்பி இருக்க வேண்டாம்.
உயரம் என்றால்
எவரெஸ்ட்
உயரவேண்டு மென்றால் நெவர் ரெஸ்ட் கவிஞர் கவிதாசன் மாணவர்களுக்கு, தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியதாவது: வெற்றி பெற வேண்டு மென்றால், பஞ்ச சூத்திரங்களான லட்சியம், தன்னம்பிக்கை, திட்டமிட்ட உழைப்பு, விடா முயற்சி, நேர நிர்வாகம் ஆகியவற்றை உணர்ந்து நமது செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் லட்சியம் என்பது அவசியமானது. லட்சியமில்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகை போன்றது, காற்றில் நகர்ந்து செல்லுமே தவிர, கரையை சென்றடையாது.
தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கினால், சாதாரணமானவர்களும் சாதனை மனிதர்களாக முடியும். மூச்சு விடுபவனெல்லாம் மனிதனில்லை, முயற்சி செய்பவர்களே நல்ல மனிதன். சுயபச்சாதாபம், துாக்கம், சோம்பேறித்தனம், வீண் அரட்டை, இணையதளம், &'டிவி&', மொபைல்போன் உள்ளிட்டவைகளை தவிர்த்து தேர்வுக்கு தயார் ஆகுங்கள்.
உயரம் என்றால் எவரெஸ்ட், உயரவேண்டும் என்றால், &'நெவர் ரெஸ்ட்&' என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். இளமையில் வியர்வை சிந்த தயங்கினால், முதுமையில் கண்ணீர் சிந்தும் சூழல் வரும். இதனால், பள்ளி பருவத்திலேயே தங்களின் சிந்தனைகளை சீர்படுத்திக்கொள்ளவேண்டும்.
ஆங்கில அகராதி
புரட்டுங்க!
ஆங்கில பாடத்தை பொறுத்தவரையில், மாணவர்கள் முழு பாடங்களை படிப்பதில்லை; கேள்விகளை மனப்பாடம் செய்து தேர்வு எழுதிவிடுகின்றனர். எதிர்காலத்தில் உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கு ஆங்கிலத்தில் புலமை இருப்பது அவசியம். படிக்கும் பொழுது அகராதியை பயன்படுத்தி வார்த்தைகளுக்கான அர்த்தங்களை புரிந்துகொண்டால் எளிதான நினைவில் நிறுத்தலாம். பெரும்பாலான மாணவர்கள் சிறிய எழுத்துப்பிழைகளால் மதிப்பெண்களை இழக்கின்றனர். இதை தவிர்க்க, கடுமையாக கருதும் வார்த்தைகளை ஒரு முறைக்கு பல முறை எழுதி பார்க்கவேண்டும்.
கணிதம் என்றாலே மாணவர்களிடம் ஒரு வெறுப்பு உள்ளது. ஆனால் கணக்கில் எளிதில் வெற்றிப்பெறலாம். என்னால் கணிதத்தில் வெற்றி பெற முடியாது என எண்ணும் மாணவர்கள் இரண்டு மற்றும் நான்காம் பாடத்தில் உள்ள, 10 மதிப்பெண் கேள்விகளை படித்தால் போதும். பாட புத்தகத்தின் பின்னால் உள்ள ஒரு மதிப்பெண், பாடங்கள் ஒன்று மற்றும் ஒன்பதில் உள்ள ஆறு மதிப்பெண்கள் கேள்விகளை படிக்க வேண்டும்.
இதன் மூலம், 90 முதல், 100 மதிப்பெண்களை எளிதில் பெற்று விடலாம். தேர்வில், 100 சதவீதம் பெற விரும்புபவர்கள், முதல் தொகுதி முழுவதையும் படிக்க வேண்டும். இரண்டாம் தொகுதியில் பாடங்கள் ஆறு, ஒன்பது மற்றும், 10 ஆகியவற்றை படிக்க வேண்டும். தேர்வின் போது எழுதப்படும் முதல், 10 கேள்விகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். சூத்திரங்கள் அனைத்தையும் நன்கு கற்றிருப்பது அவசியம். அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்த பின் சரிபார்ப்பது அவசியம்.
விழுந்தாலும்
எழுந்து நிற்கும் துணிவு
தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் நேற்று மதியம் பிளஸ் 2, கலை பிரிவு மாணவர்களுக்கு, துறை வல்லுனர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதற்கு கோவை கணபதி பகுதியை சேர்ந்த பிரியந்தாரா என்ற மாணவி வந்தார். சக்கர நாற்காலியில், கை மற்றும் காலில் கட்டுடன் வந்த இம்மாணவியின் ஆர்வத்தை கண்டு அனைவரும் ஒரு கணம் வியந்தனர்.
மாணவி பிரியந்தாரா கூறுகையில், மாடியிலிருந்து தவறி விழுந்ததால் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இருந்தபோதும், இந்தாண்டு பொதுத்தேர்வு எழுத உள்ளேன். பள்ளியில் ஆசிரியர்கள் பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். அவர்கள் கற்றுத்தந்தது தகுந்த அறிவை கொடுத்துள்ளது. இந்நிகழ்ச்சியில், அனுபவமிக்க ஆசிரியர்களின் கருத்துகளை தெரிந்து கொள்ள முடியும் என்பதால் வந்தேன்.
தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது குறித்து, ஆசிரியர்களின் ஆலோசனைகளை கேட்டு அறிந்து கொண்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது, என்றார். வீழ்ந்தாலும், எழுந்து நிற்கும் துணிவுடன், ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியந்தாராவுக்கு வாழ்த்துக்கள்.
