UPDATED : ஆக 11, 2009 12:00 AM
ADDED : ஆக 11, 2009 02:24 PM
பெங்களூரு: ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ., படிப்பில் சேர ஆன்லைனில் நடத்தப்பட உள்ள பொது நுழைவுத்தேர்வு (கேட்) கடுமையாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.
கடந்த 33 ஆண்டாக ‘கேட்’ தேர்வு, பேப்பர், பென்சில் மூலம் வழக்கமான முறையில் நடத்தப்பட்டு வந்தது. கம்ப்யூட்டர் மூலம் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டதை அடுத்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான முழு ஏற்பாடுகளை செய்துள்ளது.
கம்ப்யூட்டர் அடிப்படையில் நடத்தப்படும் கேட் தேர்வு, இதுவரை இல்லாத அளவில் பெரும் மாற்றங்களை கொண்டிருக்கும். கேள்விகளும் கடுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கடந்தாண்டு வரை, வழக்கமாக நவம்பர் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நடந்து வந்தது. ஆனால், கம்ப்யூட்டர் அடிப்படையில் ‘கேட்’ தேர்வு இந்த முறை நடப்பதால், பல இடங்களுக்கு ஏற்ப, நவம்பர் மாதம் பத்து நாட்கள் நடக்கும்.
எந்தெந்த நகரங்களில் எப்போது நடக்கும் என்பது பிறகு அறிவிக்கப்படும். கடந்த 1960களில் இருந்து ‘கேட்’ தேர்வு, ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் தந்து, கேள்வி கேட்கும் அடிப்படையில் தான் இருந்து வந்தது. கடந்த 80களில் ‘ஆப்டிக்கல் மார்க் ரீடிங்’ முறை புகுத்தப்பட்டது. இப்போது கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படுவதால், முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். வெளிநாட்டு படிப்புக்காக எழுதப்படும் டோபல், ஜிஆர்இ., ஜிமேட் போன்ற நுழைவுத்தேர்வுக்கு ஈடாக இருக்கும்.
கடந்த 2003ல், 90 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்றனர். கடந்தாண்டு இரண்டரை லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதனால், இந்த தேர்வை நடத்துவது சுலபமாக இருக்காது என்பதால், கம்ப்யூட்டர் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. வழக்கமான முறையில் நடக்கும் ‘கேட்’ தேர்வுக்கான செலவை விட, பலமடங்கு இதற்கு செலவாகும். தேர்வை கம்ப்யூட்டர் மூலம் நடத்த ‘ப்ரோமெட்ரிக்’ நிறுவனத்துக்கு கான்ட்ராக்ட் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐ.ஐ.எம்.,களுக்கு 200 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் பங்கேற்க மாணவர்கள் 1,400 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும்; கோட்டா மாணவர்கள் பாதி கட்டணம் கட்டினால் போதும். மொத்தம் ஆயிரத்து 500 இடங்களுக்கு, இந்த முறை 23 நகரங்களில் கம்ப்யூட்டர் மூலம் ‘கேட்’ தேர்வு நடக்கிறது. கடந்தாண்டை விட இந்த முறை அதிக மாணவர்கள் பங்கேற்பர். இதுவரை, பென்சிலால் பேப்பரில் பதில்களை குறித்துவந்த மாணவர்கள், இந்த முறை கம்ப்யூட்டரில் ‘மவுஸ்’ பிடித்து பதில்களை ‘டிக்’ செய்யப்போகின்றனர்.
