UPDATED : ஆக 16, 2020 12:00 AM
ADDED : ஆக 16, 2020 11:48 AM
பெரம்பலுார்;
நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய, இரு வாலிபர்களை மீட்ட, மூன்று பெண்களுக்கு, நேற்று சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., &'கல்பனா சாவ்லா&' விருது வழங்கி கவுரவித்தார்.
பெரம்பலுார் மாவட்டம், ஆதனுார் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி செந்தமிழ் செல்வி, 38, சுந்தரபாலன் மனைவி முத்தம்மாள், 34, அண்ணாமலை மனைவி ஆனந்தவல்லி, 34. இவர்கள் மூவரும், இம்மாதம், 6ம் தேதி, கொட்டறை நீர்த்தேக்கத்தில் துணி துவைத்து கொண்டிருந்தனர்.அப்போது, நீர்த்தேக்கத்தில் குளித்து கொண்டிருந்த வாலிபர்கள் நான்கு பேர், நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்தனர்.
இதைக் கண்ட பெண்கள் மூவரும், சற்றும் தாமதிக்காமல், தண்ணீரில் குதித்து நீந்தி சென்று, தாங்கள் அணிந்திருந்த சேலையை நீரில் வீசி, தண்ணீரில் உயிருக்கு போராடிய பவின்குமார், கார்த்திக் என்ற இருவரை உயிருடன் மீட்டனர். மற்ற இருவர் நீரில் மூழ்கி இறந்தனர்.உயிரையும், மானத்தையும் பெரிதாக கருதாமல், தண்ணீரில் தத்தளித்த வாலிபர்களை உயிருடன் மீட்ட, மூன்று பெண்களின் துணிச்சலை பாராட்டி, சுதந்திர தின விழாவில், விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என, நம் நாளிதழில், 9ம் தேதி, செய்தி வெளியிடப்பட்டது.
நேற்று, சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில், செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகிய மூவருக்கும், முதல்வர் இ.பி.எஸ்., &'கல்பனா சாவ்லா விருது&' வழங்கி கவுரவித்தார். விருதுக்கான, 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை, மூவருக்கும் பகிர்ந்து வழங்கியதுடன், பதக்கமும் வழங்கி பாராட்டினார்.
