ஒரு மாத சம்பளத்தை தியாகிக்கு செலவு செய்த மாணவர்கள்
ஒரு மாத சம்பளத்தை தியாகிக்கு செலவு செய்த மாணவர்கள்
UPDATED : ஆக 16, 2020 12:00 AM
ADDED : ஆக 16, 2020 11:57 AM
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பள்ளி மாணவர்கள் சமீர், கார்த்திக், சஞ்சய், இளவரசன், கணேசன். ஊரடங்கில் இவர்கள் செய்த வேலையை ஊரே பாராட்டியுள்ளது. அப்படி என்ன வேலை செய்தனர். அவர்களே தொடர்ந்தனர்...
பெரிதாக எதுவும் செய்யவில்லை. வீட்டில் இருந்தால் ஊரை சுற்றி வம்பிழுப்போம் என எங்கள் அம்மாக்கள் புலம்பினர். முயல்பண்ணை நடத்தும் சத்யாவிடம் வேலை கேட்டோம். பண்ணையில் விருப்பப்பட்டதை செய்ய அவரும் அனுமதியளித்தார். பள்ளி செலவையும் ஏற்பதாக கூறினார். ஒரு மாதமாக வேலை செய்தோம். இந்தாண்டு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட முடியாமல் போனதை சத்யாவிடம் தெரிவித்தோம்.
பிறகு அவர் கொடுத்த ஐடியாபடி இரவுடன் இரவாக பண்ணையில் தோரணம் கட்டி விழா ஏற்பாடு செய்தோம். சுதந்திர போராட்ட தியாகி கண்ணதாசனை அழைத்து தேசியக்கொடி ஏற்ற வைத்து கவுரவித்தோம். பங்கேற்றவர்களுக்கு காலை டிபன் வழங்கினோம். இந்த சந்தோஷத்தால் மனசு நிறைந்துள்ளது. ஏற்பாடு செய்த சத்யாவிற்கு நன்றி, என்றனர்.
கார்த்திக் பிளஸ் 2 முடித்துள்ளார். மற்றவர்கள் 8, 9ம் வகுப்பு படிக்கின்றனர். சமீர் பிளஸ் 1 படிக்கிறார். மாணவர்களால் தனக்கும் பெருமை என்றார் சத்யா. இவர்களை பாராட்ட: 98432 55495
