UPDATED : நவ 11, 2020 12:00 AM
ADDED : நவ 11, 2020 05:35 PM
சென்னை:
மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்படும் என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு tnmedicalselection.org, tnhealth.tn.gov.in என்ற இணைய தளங்களில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில் தரவரிசை பட்டியல் தீபாவளி பண்டிகை முடிந்த சில நாட்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் கடந்தாண்டுகளில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு வந்த மாணவர் சேர்க்கை நடைபெறும் இடம் இந்தாண்டு இதுவரை அறிவிக்கப்படவில்லை.கொரோனா தொற்று காலத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் சென்னைக்கு வரும் சிரமத்தை கருத்தில் கொண்டு சென்னை, திருச்சி அல்லது மதுரை ஆகிய இடங்களில் மாணவர் சேர்க்கைகான கவுன்சிலிங் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இரு இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க வழக்கம் போல சென்னையில் தான் கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
மருத்துவ மாணவர் சேர்க்கை வழக்கம் போல சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் தான் நடைபெற வாய்ப்புள்ளது. இரு வேறு இடங்களில் நடக்க வாய்ப்பில்லை.மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் உடல் உபாதைகள் ஏற்படாதவாறு தற்காத்து கொள்வது அவசியம். உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின் மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
