UPDATED : மார் 04, 2021 12:00 AM
ADDED : மார் 04, 2021 09:31 AM
புதுச்சேரி;
பொதுத் தேர்வுகள் குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்டு, அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக, தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு, &'ஆல் பாஸ்&' என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் மாணவர்களின் நிலை குறித்து கவர்னர் தமிழிசையிடம் கேட்டபோது, சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், 9, 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், பழைய நடைமுறை தொடரும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் ஓராண்டாக நிறுத்தப்பட்டிருந்த பால் வழங்கும் திட்டத்தை மீண்டும் துவக்கி வைத்த கவர்னர் தமிழிசை, நிருபர்களிடம் கூறியதாவது:
பள்ளிகள் முழு நேரம் இயங்குவது குறித்தும், தேர்வுகள் தொடர்பாகவும் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனால், கொரோனா தொற்று உள்ள நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளை முழு நேரமும் நடத்தலாமா, தேர்வு முறையில் தமிழகத்தை பின்பற்றுவதால், 9, 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வை இப்போது நடத்தலாமா, தள்ளி வைக்கலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது குறித்து கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.
பெற்றோர்களிடம் கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, அதிகாரிகளுடன் ஆலோசித்து, அதனடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
