UPDATED : மே 08, 2021 12:00 AM
ADDED : மே 08, 2021 04:38 PM
பொன்னேரி:
பள்ளி மற்றும் கல்லுாரிகளில் வளர்க்கப்படும் மரங்களை தீ வைத்து எரிக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் மற்றும் அரசு கல்லுாரி வளாகத்தில், வனத்துறை மூலம், வேம்பு, புங்கன், மகாகனி, நாவல், பூவரசு, குல்மோர், பெல்டாபாரம் என, 3,000க்கும் அதிகமான மரக்கன்றுகள், 2019ம் ஆண்டு வைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. நன்கு வளர்ந்து வரும் செடிகளில் அவ்வப்போது சமூக விரோதிகள் சிலர், காய்ந்து கிடக்கும் சருகுகள் மற்றும் புற்களில் தீ வைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கிறது.
பாதிப்பு
இரு தினங்களுக்கு முன், பொன்னேரி அரசு கல்லுாரியில் வைக்கப்பட்டிருந்த செடிகள் தீப்பற்றி எரிந்தன. தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். இந்நிலையில், நேற்று, பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சமூக விரோதிகள் தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
தகவல் அறிந்த பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். பள்ளி மற்றும் கல்லுாரி வளாகங்களில் வெளிநபர்கள் சுற்றித் திரிவதை தடுத்து, செடிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
