புதிய கண்டுபிடிப்பு உருவாக்க மாணவர்களுக்கு அறிவுரை
புதிய கண்டுபிடிப்பு உருவாக்க மாணவர்களுக்கு அறிவுரை
UPDATED : நவ 17, 2009 12:00 AM
ADDED : நவ 17, 2009 12:46 PM
திருச்செங்கோடு செங்குந்தர் மகளிர் இன்ஜினியரிங் கல்லூரியில், இந்திய அறிவியல் கழகத்தில் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி துவக்க விழா, கல்லூரி கலையரங்கில் நடந்தது.
கல்வி நிறுவன தலைவர் ஜான்சன் நடராஜன் தலைமை வகித்தார். முதல்வர் பார்வதி வரவேற்றார். இந்திய அறிவியல் கழக தலைவர் ஷெட்டி, விழா மலர் வெளியிட்டு பேசியதாவது:
நமது நாட்டில் பெண் கல்வி மிகவும் குறைவாக உள்ளது. அதை மேம்படுத்தும் வகையில் கிராமப்பகுதியில் மகளிர் இன்ஜினியரிங் கல்லூரி துவங்கி சிறப்பாக நடத்தி வருவது பாராட்டுக்குரியது. பெண்கள் கல்வி கற்பதன் மூலம் அடுத்த தலைமுறையும் சிறப்பானதாக அமையும். தற்போது 8 சதவீதம் பேர் தான் உயர் கல்வி கற்கின்றனர். விரைவில் 15 சதவீதமாக வளரும். அறிவியல் ஆராய்ச்சி படித்தவர்கள் 30 ஆயிரம் பேர் தேவைப் படுகின்றனர்.
நம் நாட்டில் தகுதியும், திறமையும் கொண்ட இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இந்தியாவில் 15க்கும் மேற்பட்ட பல்கலை உருவாக உள்ளது. உயர் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும். அவர்களுக்கு தரமான கல்வி, சர்வதேச தரத்தில் அளிக்க இந்திய அறிவியல் கழகம் பேராசிரியர்களையும், மாணவர்களையும் ஒருங்கிணைத்து வருகிறது.
மாணவர்கள் கற்பனை திறனுடன் புதிய கண்டுபிடிப்பாளர்களாக உருவாக வேண்டும். வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். தொழிலதிபர்களாக திகழவேண்டும். அப்போது தான் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். எதிர்காலத்திற்கேற்ப மாணவர்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய அறிவியல் கழகத்தில் மூன்று லட்சம் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தலைமை பண்புடன் தொழிற்சாலையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்பவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கல்லூரி துணைத்தலைவர் தனசேகர், இயக்குனர் பாலதண்டபாணி, செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் கோடீஸ்வரன், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.
