தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அதிக பணிப்பளுவால் திணறும் கல்வித் துறை

அதிக பணிப்பளுவால் திணறும் கல்வித் துறை

அதிக பணிப்பளுவால் திணறும் கல்வித் துறை


UPDATED : டிச 02, 2009 12:00 AM

ADDED : டிச 02, 2009 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2009 12:00 AM ADDED : டிச 02, 2009 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை வருவாய் மாவட்டத்தில் இருந்து திருப்பூரை தனி மாவட்டமாக பிரித்து அரசாணை வெளியாகியும், பள்ளிக் கல்வித் துறையில் போதுமான ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பணிப்பளு தாங்க முடியாமல் கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை ஊழியர்கள் திணறுகின்றனர்.


கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் கல்வி மாவட்டங்கள் அடங்கிய கோவை வருவாய் மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான புதிய பள்ளிகள் துவக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்வி அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படாமலே உள்ளது.


திருப்பூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டாலும், அம்மாவட்டத்துக்கென பிரத்யேக முதன்மை கல்வி அலுவலர்(சி.இ.ஓ) இன்னும் நியமிக்கப்படவில்லை. கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்திதான் இரு மாவட்டங்களின் சி.இ.ஓ., ஆக செயல்பட்டு வருகிறார்.


இதனால் வரும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கான பணிகளையும், வழக்கம் போல் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகமே கவனிக்க வேண்டியதுள்ளது. கோவை மற்றும் நீலகிரி கல்வி மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகத்தின் நிலைதான் இதில் பரிதாபம்.


450க்கு மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மிக்க இந்த முக்கிய அலுவலகத்தில், கண்காணிப்பாளர் பதவி உட்பட பல பணியிடங்கள் காலியாகவே உள்ளன. பள்ளிகளின் நேரடி ஆய்வுப் பணிகளுடன் அலுவலகத்தின் முக்கிய பணிகளையும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளரே செய்ய வேண்டியிருப்பதால், கடும் பணிச்சுமையால் திணறும் நிலை உருவாகியுள்ளது.


தமிழ்நாடு கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் பால்ராஜ் கூறுகையில், “திருப்பூர் மாவட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டபின், புதிய மாவட்டத்துக்கு ஒரு நேர்முக உதவியாளர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.


இதில் முதன்மை கல்வி அலுவலர் இதுவரை நியமிக்கப்படவில்லை. கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்த சில பணியாளர்கள் திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் ஏற்கனவே பணிப்பளுவால் திணறிக் கொண்டிருக்கும் இந்த அலுவலக ஊழியர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்; பணிகள் பாதிக்கப்படுகின்றன.


கோவை கல்வி மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்துக்கு புதிதாக பணியிடங்களை உருவாக்க வேண்டும். கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பிரித்து திருப்பூருக்கு வழங்கப்பட்ட பணியிடங்களை, கோவை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு ஒதுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜன., 23ல் மாபெரும் கோரிக்கை பேரணி நடத்தவுள்ளோம்,” என்றார்.


மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கிய பொறுப்பு, கல்வி அலுவலகங்களை சார்ந்துள்ளது. ஆகவே அதிகரித்து வரும் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்வி  அலுவலகங்களில் கூடுதல் பணியிடங்களை உருவாக்கி புதிதாக பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அரசாணையை அரசே மீறலாமா?


மாவட்ட தலைநகரங்களில் உள்ள கல்வி அலுவலகங்களுக்கு இரண்டு கண்காணிப்பாளர்கள், 10 இளநிலை உதவியாளர்கள், ஒரு தட்டச்சு ஊழியர், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், இரண்டுக்கு மேற்பட்ட கல்வி அலுவலகங்களை கட்டுப்படுத்தும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு இரண்டு கண்காணிப்பாளர், இரண்டு தட்டச்சு ஊழியர்கள், 3 அலுவலக உதவியாளர்கள், 12 இளநிலை உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில்(எண்.595) தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை முதன்மை கல்வி அலுவலகத்தின் கீழ் மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஆனால் அரசு வெளியிட்ட அரசாணையின்படி இந்த அலுவலகத்தில் போதுமான ஊழியர்களை நியமிக்காமல் அரசே அரசாணையை மீறுவது எந்த வகையில் நியாயம் என, பணிச்சுமையால் திணறும் ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us