தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம்!

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம்!

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம்!


UPDATED : டிச 05, 2009 12:00 AM

ADDED : டிச 05, 2009 01:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2009 12:00 AM ADDED : டிச 05, 2009 01:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் உள்ள அரசுத்துறை சார்ந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தரமான இடைநிலைக் கல்வியை உறுதி செய்வதற்காக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் புதிய திட்டமாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் நடப்பாண்டு முதல் தொடங்கப்படுகிறது.


2017ம் ஆண்டுக்குள் 16 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இடைநிலைக் கல்வி வழங்குதல், 2020ம் ஆண்டுக்குள் 18வயதுக்குட்பட்ட அனைவருக்கும் மேல்நிலைக் கல்வி வாய்ப்பை ஏற்படுத்துதல், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை உறுதி செய்தல், பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துதல், ஆண், பெண், இன, மத வேறுபாடின்றி இடைநிலைக் கல்வியை உறுதி செய்தல் ஆகியவற்றை நிறைவேற்றும் நோக்கத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 151 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குரிய செலவில் மத்திய அரசு 75 சதவீத தொகையாக ரூ,133.58 கோடியும் மாநில அரசு 25 சதவீதமாக 37.86 கோடியும் வழங்குகின்றன.


இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 4,841 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.19.36 கோடி பள்ளி மானியமாக வழங்கப்படும். ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.12.10 கோடி பராமரிப்பு மானியமாகவும் வழங்கப்படும். அத்துடன், ரூ.116.24 கோடி செலவில் 200 புதிய உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும். ரூ.1.5 கோடி செலவில் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சியும் அளிக்கப்படும்.


இத்திட்டப் பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்காக மாநிலத் திட்ட இயக்ககம் ஏற்படுத்தப்படும். கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவிகள் இலவசமாகத் தங்கிப் பயிலும் 44 மாணவியர் விடுதிகள் கட்டப்படும் என்று முதல்வர் கருணாநிதி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us