UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM
ADDED : ஜூன் 27, 2023 09:27 AM
மகுடஞ்சாவடி:
போதிய வகுப்பறை இல்லாததால், வராண்டாவில் அமர்ந்து மாணவ, மாணவியர் படிக்கும் அவலம் தொடர்கிறது.மகுடஞ்சாவடி, நடுவனேரி ஊராட்சி துாங்கான்வளவில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு, 100 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்களுக்கு, 3 கட்டடங்கள் இருந்த நிலையில் ஒரு கட்டடம் சேதமானது. அந்த கட்டடம் கடந்த ஆண்டு இடிக்கப்பட்டது. இதனால் போதிய வகுப்பறை இல்லாத நிலை ஏற்பட்டு, வராண்டாவில் அமர்ந்து, மாணவர்கள் படிக்கும் அவலநிலை தொடர்கிறது.இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
மாணவர்கள், ஓராண்டாக மர நிழல், வராண்டாவில் அமர்ந்து படிக்கின்றனர். ஒரு கழிப்பறை மட்டும் உள்ளதால், மாணவியர், ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். மாணவர்கள் திறந்தவெளியில் செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இடநெருக்கடியால் நடப்பாண்டில், 10 மாணவ, மாணவியர், மாற்றுச்சான்றிதழ்களை வாங்கி கொண்டு வேறு பள்ளிக்கு சென்றுவிட்டனர். கடந்த கல்வி ஆண்டில் புது கட்டடம் கட்ட, சங்ககிரி தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில், 18.80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, 3 மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதற்கான பணி இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். உடனே புது கட்டடம், போதிய அளவில் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மகுடஞ்சாவடி பி.டி.ஓ., முத்து கூறுகையில், கடந்த கல்வி ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை. அதனால், எம்.எல்.ஏ.,விடம் தெரிவித்து, 30 லட்சம் ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது. அந்த நிதி கிடைத்ததும் விரைவில் பணி தொடங்கப்படும், என்றார்.
