மாணவர் சேர்க்கையில் தில்லுமுல்லு: அதிகாரி சஸ்பெண்ட்
மாணவர் சேர்க்கையில் தில்லுமுல்லு: அதிகாரி சஸ்பெண்ட்
UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM
ADDED : ஜூன் 30, 2023 04:02 AM
நாகப்பட்டினம்:
நாகையில் உள்ள மீன்வள பல்கலைக் கழக மாணவர் சேர்க்கையில், பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.நாகையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலையின் கீழ், நாகை, தலைஞாயிறு, பொன்னேரி, சென்னை, துாத்துக்குடி ஆகிய இடங்களில் உறுப்பு கல்லுாரிகள் இயங்குகின்றன.இந்த கல்லுாரிகளில் உள்ள பாடப்பிரிவுகளான, மீன்வள அறிவியல் - 120, மீன்வள பொறியியல் - 30, ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் - 20, மீன்வள உயிர் தொழில்நுட்பம் மற்றும் உணவு தொழில்நுட்பம் - 40, என 250, இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். கல்லுாரிகளில் சேர, ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கட் -ஆப் மார்க் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இதில், நாகை மாவட்டம் தலைஞாயிறில் அமைந்துள்ள, டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வள கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மீன்வள அறிவியல் இளநிலை பட்டப் படிப்பு, 2021 - 2022 மற்றும் 2022 - 2023ம் ஆண்டு, மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.அதாவது, காத்திருப்பு பட்டியலில் தகுதியான மாணவர்களை ஓரம்கட்டி, மிகக்குறைந்த, கட் ஆப் மார்க் உடையவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று சேர்க்கை அளித்துள்ளதாக, மாணவர்கள் சிலர் அரசுக்கு புகார் அளித்தனர். முறைகேடு குறித்து விசாரணை செய்ய, தமிழ்நாடு மீன்வள துறை முதன்மை செயலர் கார்த்திக் உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை குழு அமைக்கப்பட்டது.முதற்கட்ட விசாரணையில், 2022 -2023ம் ஆண்டு இளநிலை மீன்வள பட்டப் படிப்புகளுக்கு, காத்திருப்போர் பட்டியலில், 190 கட் ஆப் மார்க்கிற்கு, 127 கட் ஆப் பெற்றிருந்த 32 மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று, சேர்க்கை அளித்தது தெரிந்தது. தொடர்ந்து, பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜவகர், தட்டச்சர் இம்மானுவேல் ஆகியோர், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, தலைஞாயிறு டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வள கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்ட, 32 மாணவ - மாணவியர் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், குறைவான மதிப்பெண் பெற்ற நீங்கள், எப்படி கல்லுாரியில் சேர்ந்தீர்கள்? என விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமாரிடம் கேட்டபோது, புகார் குறித்து விசாரணை நடத்த பல்கலைக் கழகம் மற்றும் அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு தான் எதையும் கூற முடியும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
