UPDATED : ஜூலை 13, 2023 12:00 AM
ADDED : ஜூலை 13, 2023 09:17 AM
சென்னை:
பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தாமதமின்றி நடத்த வேண்டும் என உயர்கல்வி துறைக்கு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் ஏழு அரசு கல்லுாரிகள், 16 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், பி.எட்., எம்.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் கல்லுாரிகளில் பி.எட்., சேர்க்கை நிர்வாக அடிப்படையில் நடத்தப்படுகின்றன. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கு மட்டும் கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் கவுன்சிலிங் வழியே நடத்தப்படுகின்றன.இந்த கவுன்சிலிங்கை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் தாமதமாக, அக்டோபரில் நடத்துவதால் அரசு கல்லுாரிகளில் இடம் கிடைக்கும் நிலையில் உள்ள மாணவர்கள் கூட, தனியார் கல்லுாரிகளில் முன்கூட்டியே சேர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதேநேரம் அரசின் நிதியில் செயல்படும் கல்லுாரிகளில், மாணவர்கள் சேராமல் இடங்கள் வீணாகின்றன. இந்த நிலையை போக்க, இந்த ஆண்டில் இருந்தாவது, உரிய காலத்தில் ஆகஸ்ட்க்குள், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
