UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM
ADDED : ஜூலை 22, 2023 01:25 PM
விருதுநகர்:
மேகமலை புலிகள் காப்பகம் செண்பகத்தோப்பில் நடந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தனித்துவ மேம்பாட்டு உண்டு உறைவிடப் பயிற்சி, கோடைகால கல்வி சுற்றுலாவின் பறவைகள், பட்டாம்பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட 26 மாணவர்களுடன் விருதுநகரில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது.பட்டாம்பூச்சிகளின் வகைகள் குறித்தும், பட்டாம்பூச்சிகள் உலகில் இல்லை என்றால் அதனுடைய தாக்கம் எவ்வாறு இருக்கும் என்றும் கேள்விகள் எழுப்பி கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடினார். மேலும் அவர் பேசுகையில், பட்டாம்பூச்சிகள் இந்த உலகில் இல்லை என்றால், மகரந்த சேர்க்கை நடக்காது. இதனால் பூக்கள், காய், பழம், கனிகள், தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்ய முடியாது. மனித இனத்தை விட, தாவரங்கள், விலங்குகள், பூச்சி இனங்கள் உள்ளிட்ட பிற உயிரினங்களே அதிகமாக இருக்கிறது. எல்லா உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு அடிப்படை காற்று, நீர், ஒளி. எனவே இந்த மூன்றையும் மாசுபடாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம். மனிதனுடைய ஒவ்வொரு செயல்பாடும் இயற்கையை பாதிக்க கூடாது, என்றார்.முகாமில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ரோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் நிகில், விஷ்ணு சங்கர், பிரணவ் ஆகியோர் தங்களின் பட்டாம்பூச்சி, டிராகன் பிளைஸ் பற்றிய துண்டு பிரசுரங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய புத்தகங்களை மாணவர்களுக்கு பரிசாக வழங்கினர். கலெக்டர் ரோர் குழுவின் புதிய படைப்பான தமிழ்நாட்டின் பொதுமரங்கள் துண்டுபிரசுரத்தை வெளியிட்டார். பயிற்சி அளித்த ஆசிரியர்கள் விவேக், ஹரீஷ், வினோத் பிரணவ், விக்னேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
