UPDATED : ஆக 15, 2023 12:00 AM
ADDED : ஆக 15, 2023 11:26 AM
சென்னை:
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தாமதம் இன்றி ஓட்டுனர் உரிமம் வழங்க, போக்குவரத்து ஆணையரகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்&' என, தென் மாநில ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து, தென் மாநில ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கூட்டமைப்பு தலைவர் சண்முகம் கூறியதாவது:
தமிழகம் முழுதும், 4,000க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டுனர் பள்ளியிலும் தினமும், 10க்கும் மேற்பட்டோர் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்து, பயிற்சி பெற்று வருகின்றனர். ஓட்டுனர் உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க சிரமமமாக இருப்பதால், 50 சதவீதம் பேர் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் வாயிலாகவே உரிய பயிற்சி பெற்று, உரிமம் பெற விரும்புகின்றனர். ஆனால், நாங்கள் எங்கள் சார்பில் வரும் விண்ணப்பதாரர்களுக்கு உரிய சோதனை நடத்தி, உரிமம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. வாரத்தில் இரு நாட்களில் இரண்டரை மணி நேரம் மட்டுமே, டெஸ்ட் நடத்தி, உரிமம் வழங்கப்படுகிறது. எனவே, எங்களுக்கான நேரத்தை அதிகமாக்கி, ஓட்டுனர் உரிமங்களை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து ஆணையரிடம் வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
