‘அனுமதியில்லாமல் பள்ளிகளை துவக்குபவர்கள் மீது நடவடிக்கை’
‘அனுமதியில்லாமல் பள்ளிகளை துவக்குபவர்கள் மீது நடவடிக்கை’
UPDATED : ஜன 21, 2010 12:00 AM
ADDED : ஜன 21, 2010 12:27 PM
நாகப்பட்டினத்தில் உள்ள அசெம்பிளி ஆப் ஜீசஸ் கிறிஸ்ட் பப்ளிக் ஸ்கூல் (ஏ.ஜே.சி.,) தாளாளர் ஞானதாஸ் தாக்கல் செய்த மனு:
கடந்த 2007ம் ஆண்டு எங்கள் பள்ளி துவங்கப்பட்டது. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை பின்பற்றுகிறோம். இங்கு 487 மாணவர்கள் படிக்கின்றனர். சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதால், அரசின் அனுமதியின்றி பள்ளி துவங்க சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, பள்ளி துவங்க அனுமதி கோரி மாநில அரசிடம் விண்ணப்பிக்கவில்லை.
இந்நிலையில், அரசிடம் அனுமதி பெறாததால், எங்கள் பள்ளியை மூடுமாறு நாகை மாவட்ட தலைமை கல்வி அதிகாரி உத்தரவிட்டார். மாணவர்களை வேறு பள்ளியில் சேர்ப்பது குறித்தும் உத்தரவிட்டார். நாகையில் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை மற்றொரு பள்ளி நடத்துகிறது. ஆனால், அந்தப் பள்ளியில் 780 மாணவர்கள் உள்ளனர். எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், ‘நாகை மாவட்டத்தில் பள்ளி வேன், கால்வாய்க்குள் விழுந்ததில் ஒன்பது குழந்தைகள், ஒரு ஆசிரியை பலியாயினர். அந்தப் பள்ளி அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டது. இதையடுத்து, அரசிடம் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
‘அதன்படி, நாகை மாவட்டத்தில் 10 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டது. அனுமதியின்றி பள்ளிகள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது. மாணவர்களை வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள்’ என்றார்.
மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் கோரியபடி நிவாரணம் வழங்க விரும்பவில்லை. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் உடனடியாக வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2007ம் ஆண்டு முதல் இப்பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளி மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட கல்வி அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்த வேண்டும். துவக்கத்திலேயே கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால், மாணவர்கள் இப்போது துன்பப்பட வேண்டியதில்லை. அதிகாரிகளின் நடவடிக்கையின்மையால், அப்பாவி மாணவர்களுக்கு தான் பிரச்னை. கல்வியாண்டின் இறுதியில் இந்த மாணவர்களை எப்படி அடுத்த பள்ளியில் சேர்க்கப் போகின்றனர், அவர்களின் கதி என்ன என்பது குறித்து விடையில்லை.
அங்கீகாரம் இல்லாத ஒரு பள்ளியைச் சேர்ந்த ஒன்பது குழந்தைகளும், ஆசிரியையும் வேன் விபத்தில் இறந்ததால் தான், தற்போது இந்த உத்தரவை கல்வி அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். அதுவும், அரசின் உத்தரவால் கல்வி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். எனவே, மாணவர்கள் சமூகத்தின் நலன் கருதி, இனிமேலாவது ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளும் விழிப்புடன் இருந்து, அங்கீகாரம் மற்றும் அனுமதியில்லாமல் பள்ளிகளை துவக்குபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போது தான், இத்தகைய சூழ்நிலைகள் எதிர்காலத்தில் மீண்டும் எழாது. இவ்வாறு நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.
