UPDATED : அக் 12, 2023 12:00 AM
ADDED : அக் 12, 2023 09:17 AM
மாமல்லபுரம்:
சர்வதேச சுற்றுலா தினமாக, செப்., 27ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, முக்கிய சுற்றுலா இடங்களில், தமிழக சுற்றுலாத் துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளி மாணவ - மாணவியரை சுற்றுலா அழைத்துச் சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு அடுத்த ஒழலுார் ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியின் 25 மாணவர்கள், தாம்பரம், சமூக நலத்துறை விடுதியின் 25 மாணவியர், சுற்றுலாத் துறை சார்பில், நேற்று சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமையில், செங்கல்பட்டிலிருந்து புறப்பட்ட அவர்களை, பயிற்சி கலெக்டர் ஆனந்த் குமார் சிங் அனுப்பி வைத்தார். சென்னை அடுத்த முட்டுக்காடு, தட்சிணசித்ரா வளாகத்திற்கு சென்று, மாணவ - மாணவியர் பார்வையிட்டனர். தென்னிந்திய பாரம்பரிய வீடுகள், இயற்கை தட்பவெப்ப சூழலுக்கேற்ற அவற்றின் வடிவமைப்பு உள்ளிட்டவற்றை, அவர்கள் கண்டு ரசித்தனர்.அதைத் தொடர்ந்து, மாமல்லபுரம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதியில், மதிய உணவுக்கு பின், பல்லவர் கால கடற்கரை கோவில் உள்ளிட்டவற்றை கண்டு மகிழ்ந்தனர்.
