தனியார் நிறுவனத்துடன் பி.எஸ்.ஜி., கல்லூரி ஒப்பந்தம்
தனியார் நிறுவனத்துடன் பி.எஸ்.ஜி., கல்லூரி ஒப்பந்தம்
UPDATED : ஜன 29, 2010 12:00 AM
ADDED : ஜன 29, 2010 05:56 PM
கோவை: பி.எஸ்.ஜி., தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் டைஸ்டார் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே, தொழில் நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
ஜவுளித்துறைக்குத் தேவைப்படும் சாயங்கள், சாய உதிரிப் பொருட்களை டைஸ்டார் நிறுவனம் தயாரித்து வருகிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத முறையில் புதிய தொழில்நுட்ப முறைகளை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிப் பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பி.எஸ்.ஜி., தொழில் நுட்பக் கல்லூரியும் டைஸ்டார் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஒப்பந்தம் பற்றி பி.எஸ்.ஜி., தொழில் நுட்பக் கல்லூரி டெக்ஸ்டைல் டெக்னாலஜி துறைத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், “கல்வி மேம்பாடு, ஆசிரியர் மற்றும் தொழில்துறையினரின் தரத்தை உயர்த்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். ஆய்வக வசதிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதிய தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் போன்றவற்றை இரு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இரு நிறுவனங்களின் வசதிகள், வல்லுனர்களின் கருத்துக்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக உறுதி செய்யப்படும்,” என்றார்.
பி.எஸ்.ஜி., தொழில் நுட்பக் கல்லூரி பேஷன் டெக்னாலஜி துறைத் தலைவர் திலகவதி, டைஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் பாலகிருஷ்ணன், மேலாளர் சிவராமகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
