UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:27 PM
சென்னை:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் நியமனம், நிலைக்கத்தக்கது அல்ல என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், புதிய துணைவேந்தர் நியமிக்கும் வரை அல்லது 2024 ஜூன் வரை, தற்போது பதவியில் உள்ளவர் நீடிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தேடுதல் குழுவை நியமித்து, 2021 ஜனவரியில் அரசு உத்தரவிட்டது. அமைப்பாளராக, டில்லியில் உள்ள ஐ.ஐ.டி., இயக்குனர் ராம்கோபால் ராவ், உறுப்பினர்களாக சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் டாக்டர் ஜெகதீஷ் குமார், புதுச்சேரி உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை செயலர் ஆகியோர் தேடுதல் குழுவில் நியமிக்கப்பட்டனர்.தேடுதல் குழுவின் பரிந்துரைப்படி, துணைவேந்தராக, டாக்டர் எஸ்.மோகன் நியமிக்கப்பட்டார். இவர், ஐந்து ஆண்டுகள் வரை அல்லது ஓய்வு பெறும் வயது வரை பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்தும், தேடுதல் குழுவை சட்டவிரோதமானது என அறிவிக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை ஓய்வூதியதாரர்கள் நல சங்கத்தின் பொதுச்செயலர் பழனியப்பா மற்றும் இணை பேராசிரியர் மவுருக பிரகாஷ், மனுக்கள் தாக்கல் செய்தனர்.இம்மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், வழக்கறிஞர் எம்.ரவி ஆஜராகி, பல்கலை மானியக்குழு விதிகளின்படி, தேடுதல் குழு நியமிக்கப்படவில்லை. யு.ஜி.சி., தலைவர் நியமிக்கும் நபர், தேடுதல் குழுவில் இல்லை என்றனர்.யு.ஜி.சி., விதிகள், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையை கட்டுப்படுத்தாது என்றும் யு.ஜி.சி.,யிடம் இருந்து மானியம் பெறாததால், அதன் விதிகள் பொருந்தாது என்றும், புதுச்சேரி அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களுக்குப் பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட தேடுதல் குழு வாயிலாக, துணைவேந்தரை நியமித்தது நிலைக்கத்தக்கது அல்ல. துணைவேந்தர் நியமனம் தொடர்பான கலந்தாய்வில், புதுச்சேரி உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி செயலர் பங்கேற்கவில்லை.துணைவேந்தர் மோகன் தகுதியானவர் அல்ல எனவும் கூறப்படவில்லை என்பதால், சட்டப்படி புதியவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அல்லது 2024 ஜூன் வரை, அவரே நீடிக்க உரிமை உள்ளது.தேடுதல் குழுவின் தேர்வு செல்லாது என்பதற்காக, துணைவேந்தராக மோகன் எடுத்த முடிவுகளை செல்லாது எனக்கூற முடியாது. மோகனுக்கு தகுதி இருந்தால், புதிய தேர்வு நடைமுறையின் போது, அவரை நியமிக்கும்படி பரிசீலிக்க கோர உரிமை உள்ளது.யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு இணையாக, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை சட்டப்பிரிவுகளிலும் திருத்தங்களை ஏற்படுத்த, தாமதமின்றி அரசும், பல்கலையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
