வெள்ளத்தில் மாணவர்கள் இழந்த கல்வி சான்றிதழ்கள் பெற வசதி
வெள்ளத்தில் மாணவர்கள் இழந்த கல்வி சான்றிதழ்கள் பெற வசதி
UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 10:16 AM
இது குறித்து, உயர் கல்வித் துறை செயலர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், வெள்ள பாதிப்பில் கல்லுாரி மற்றும் பல்கலை சான்றிதழ்களை, மாணவ -மாணவியர் இழந்தனர். அவர்கள் அவற்றின் நகல்களை, கட்டணமின்றி பெறுவதற்காக, www.mycertificates.in என்ற இணையதளம், உயர் கல்வித் துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.இதில், மழையால் பாதிக்கப்பட்ட, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியரும், தாங்கள் இழந்த சான்றிதழ்களின் நகல்களைப் பெற, அந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்தில் மாணவ - மாணவியர், சான்றிதழ்களின் விபரங்களை பதிவு செய்த பின், அவர்களின், இ - மெயில் முகவரிக்கு ஒப்புகை அனுப்பப்படும். சான்றிதழ்களின் நகல்கள், கல்லுாரி மற்றும் பல்கலைகளிடம் இருந்து பெறப்பட்டு, மாணவ - மாணவியருக்கு, அவர்கள் எந்த மாவட்டத்தில் விண்ணப்பித்தனரோ, அங்கேயே வழங்கப்படும். இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு, கட்டணமில்லா அழைப்பு மையத்தை, 1800 4250110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த அல்லது சேதமடைந்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களின் நகலை, கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். அதற்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட விண்ணப்பத்தில், தாங்கள் படித்த பள்ளித் தலைமை ஆசிரியர் வழியே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
