UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:32 PM
சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா எல் - 1 செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து செப்., 2ம் தேதி இது அனுப்பப்பட்டது.பயணம்
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே ஈர்ப்பு விசை இல்லாத, எல் - 1 எனப்படும், லாக்ராஜியன் பாயின்ட் என்ற இடத்தில் இதை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது.குஜராத்தின் ஆமதாபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளதாவது:
ஆதித்யா செயற்கைக்கோள் திட்டமிட்டபடி தன் பயணத்தை மேற்கொண்டு வருகிறது. வரும், ஜன., 6ம் தேதி தன் இலக்கான எல் - 1 பகுதியை அது அடையும்; அது சென்றடையும் சரியான நேரம் விரைவில் தெரிவிக்கப்படும்.அந்த பகுதியை அடைந்ததும், செயற்கைக்கோளின் இன்ஜின்கள் மீண்டும் இயக்கப்படும். இதன் வாயிலாக அது தொடர்ந்து பயணிப்பது நிறுத்தப்படும். பின், அந்தப் பகுதியில், தன்னை தானே ஒருமுறை சுற்றி வந்து செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும்.அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அங்கிருந்தபடி, சூரியன் குறித்த ஆய்வுகளை செயற்கைக்கோள் மேற்கொள்ளும். சூரியனின் காந்தவிசை, வெப்பநிலை உட்பட, மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.அறிவுறுத்தல்
இந்த தகவல்கள் இந்த உலகத்துக்கு மிக முக்கியமானதாக அமையும். பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, விண்வெளியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள நமக்கென தனியாக, பாரதிய ஸ்பேஸ் ஸ்டேஷன் எனப்படும் தனிப்பட்ட ஆய்வு மையத்தை அமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
