வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்: கனடா பரிசீலனை
வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்: கனடா பரிசீலனை
UPDATED : ஜன 14, 2024 12:00 AM
ADDED : ஜன 14, 2024 06:03 PM
ஒட்டாவா:
கனடாவில் வேலைவாய்ப்பின்மை மற்றும் வீடுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால், வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க பரிசீலனை செய்வதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்து உள்ளார்.வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் அடைக்கலம் கொடுக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தாண்டு 4.85 லட்சம் அகதிகளுக்கும், 2025 மற்றும் 2026ல் 5 லட்சம் அகதிகளுக்கும் அடைக்கலம் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அப்படி வருபவர்களுக்கு வீடு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதில் சிக்கல் ஏற்படுத்தும் என அரசு ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது பலருக்கு வீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்நாட்டு அரசின் அகதிகள் குறித்த முடிவு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.இந்நிலையில், அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறியதாவது:
அதிகளவு வெளிநாட்டு மாணவர்கள் இருப்பது கவலை அளிக்கிறது. இந்த ஆண்டில், வீடுகள் பற்றாக்குறை பிரச்னையை குறைக்க வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து பரிசீலனை செய்வோம். நாங்கள் எங்களது பணியை செய்து வருகிறோம். கனடா வருபவர்களுக்கு போதுமான நிதி வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்யும் அமைப்பு எங்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அதே நேரத்தில், இந்த எந்தளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை.