UPDATED : பிப் 08, 2024 12:00 AM
ADDED : பிப் 08, 2024 09:42 AM
சிவகங்கை:
சிவகங்கை அருகே அரசனுார் அரசு நடுநிலை பள்ளியில் ரூ.5.88 லட்சம் செலவில், பள்ளி வகுப்பறை சுவர் ரயில் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இங்குள்ள நடுநிலை பள்ளியில் அரசனுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 120 மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை படிக்கின்றனர். இங்குள்ள பள்ளி வகுப்பறை கட்டடம் புனரமைக்க, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரூ.5.88 லட்சத்தில் வகுப்பறை சுவர் ரயில் பெட்டி போன்று வரைபடம் வரைந்து, வகுப்பறையை ரயிலில் பயணிப்பது போல் மாற்றியுள்ளனர்.தமிழ் பாட உயிர், மெய் எழுத்துக்கள், ஆங்கில பாடத்தில் ஏ.பி.சி.டி., மற்றும் அறிவியல் பாடத்தில் பூமியை சுற்றியுள்ள கோள்களின் படம் வரைந்து, அவற்றின் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர். இந்த வகுப்பறை சுவரை மாணவர்கள் பார்க்கும் போதே, செயல்முறை படிப்பாக சுவரில் உள்ள தமிழ், ஆங்கில, அறிவியல் பாடங்களையும் எளிதில் கற்கின்றனர்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன் கூறியதாவது, 2023-24ம் ஆண்டு திட்டத்தின் கீழ் பள்ளி பழைய கட்டடங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்த நிதியின் மூலம் மாணவர்களை எளிதில் கவரும் விதத்தில் சுவரில் வர்ணம் பூசும் நோக்கில், ரயில் வடிவ வகுப்பறை, பாட ரீதியான எழுத்துக்கள், விளக்க படங்கள் வரையப்பட்டுள்ளது. இது மாணவர்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, என்றார்.