பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்முடக்கம் வாடிக்கையாளர்கள் அவதி
பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்முடக்கம் வாடிக்கையாளர்கள் அவதி
UPDATED : மே 04, 2024 12:00 AM
ADDED : மே 04, 2024 11:35 AM

சென்னை:
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று, தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை 6:00 மணி முதல் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சிக்னல், பிராட்பேண்ட், பாரத் பைபர் சேவைகள் முழுதும் முடங்கின. இதனால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர். பின், காலை 11:00 மணிக்கு கோளாறு சரிசெய்யப்பட்டது.
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் கூறியதாவது:
மொபைல் போனில் பி.எஸ்.என்.எல்., சிம் கார்ட்டை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். திடீரென்று சிக்னல் கோளாறு ஏற்படுவது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. அவசரத்திற்கு அழைப்பதற்குகூட சிக்னல் கிடைக்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே, சென்னையில் வடசென்னை, வேளச்சேரி, மடிப்பாக்கம், போரூர் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் சிக்னல் கிடைப்பது கிடையாது. தவிர, பிராட்பேண்ட் மற்றும் பாரத் பைபர் சேவை சில நேரங்களில் முழுதும் தடைப்பட்டு போகிறது. அதிகாரிகள், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறுகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே சிக்னல் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சில மணி நேரங்களிலேயே சரி செய்துவிட்டோம். வரும் நாட்களில் இது போல நடக்காமல் இருக்க முயற்சிகள் எடுக்கிறோம் என்றனர்.