UPDATED : நவ 15, 2024 12:00 AM
ADDED : நவ 15, 2024 11:44 AM
லக்னோ:
தேர்வு முறையை மாற்றியமைத்த உ.பி., பணியாளர் தேர்வாணையத்திற்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். மாணவர்களுக்கு ஆதரவாக ராகுல் களமிறங்கினார். இதனையடுத்து முடிவை தேர்வாணையம் திரும்ப பெற்றுக் கொண்டது.
அறிவிப்பு
உ.பி.,யில் அரசு பணிகளை தேர்வு செய்வதற்காக உ.பி., பணியாளர் தேர்வாணையம் (யுபிபிஎஸ்சி) உள்ளது. இந்த ஆணையம், பிராந்திய சிவில் சர்வீஸ் (பிசிஎஸ்), ஆய்வு அலுவலர்கள்(Review officer -ஆர்ஓ) உதவி ஆய்வு அலுவலர்கள்( assistant review officer- ஏஆர்ஓ) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், தேர்வுகள் மூன்று ஷிப்ட்களாக நடக்கும் என அறிவித்தது.
போராட்டம்
தேர்வுக்கு தயாராகி வந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த முறை ஒரு சிலருக்கு மட்டுமே சாதகமாக அமையும் என குற்றம்சாட்டிய அவர்கள், ஒரே ஷிப்ட் ஆக நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் 5 நாட்களாக நடந்து வருகிறது.
பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ள யுபிபிஎஸ்சி தேர்வு அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். போலீஸ் தடுப்புகள் அமைத்து இருந்தும் அதனையும் மீறி போராட்டம் நடத்தினர். அவர்களை களைக்க போலீசார் தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ராகுல் ஆதரவு
மாணவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தேர்வை எளிமைபடுத்துகிறோம் என்ற பெயரில், வெளிப்படைத்தன்மை இல்லாத அமைப்பை ஏற்படுத்துவதை ஏற்க முடியாது. மாணவர்களின் போராட்டம் நியாயமானது. கல்வி அமைப்பை அழிக்கும் பா.ஜ., அரசின் திறமையின்மைக்கு மாணவர்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்.
படிக்க வேண்டிய மாணவர்கள், வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களை போலீசார் துன்புறுத்துகின்றனர். கனவுகளை நிறைவேற்ற வீட்டில் இருந்து வெகுதூரத்தில் வந்து படிக்கும் மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை ஏற்க முடியாது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்கிறோம். சர்வாதிகாரம் மூலம் அவர்களின் உரிமையை பறிக்க முடியாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியிருந்தார்.
உறுதி
மாணவர்களின் தொடர் போராட்டம் மற்றும் அவர்களுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு அளிக்க துவங்கியதை தொடர்ந்து யுபிபிஎஸ்சி தனது முடிவை மாற்றி உள்ளது. இதன்படி, பிசிஎஸ் தேர்வு ஒரே நாளில் ஒரே கட்டமாக நடக்கும் எனவும், மற்ற இரு தேர்வுகள் குறித்து ஆராய குழு அமைக்கப்படும் எனவும் உறுதி அளித்து உள்ளது.