sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆர்வம் உழைப்பானால் அரசுப்பணி கைகூடும்

/

ஆர்வம் உழைப்பானால் அரசுப்பணி கைகூடும்

ஆர்வம் உழைப்பானால் அரசுப்பணி கைகூடும்

ஆர்வம் உழைப்பானால் அரசுப்பணி கைகூடும்


UPDATED : டிச 16, 2024 12:00 AM

ADDED : டிச 16, 2024 11:33 AM

Google News

UPDATED : டிச 16, 2024 12:00 AM ADDED : டிச 16, 2024 11:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
அரசுப்பணி சாமானிய மாணவ, மாணவியருக்கு குதிரைக்கொம்பல்ல; முயற்சியும், பயிற்சியும் இருந்தால் சாதித்துவிடலாம் என்பதை தன்னார்வப் பயிலும் வட்டம் சொல்லாமல் சொல்லிவிட்டது. ஆர்வம் உழைப்பானால் அரசுப்பணி கைகூடும் என்பது உறுதி.

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலக கூட்டரங்கில், அரசு பணி மற்றும் சீருடை பணியாளர் போட்டித்தேர்வு எழுதுவோருக்கு தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் சிறப்பு பயிற்சி, இலவசமாக அளிக்கப்படுகிறது.

இங்கு பயின்று, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், செப்., 14ல் நடத்திய குரூப் -2, குரூப் -2 ஏ போட்டித்தேர்வு முதல்நிலைத் தேர்வுகளில், தேர்வெழுதிய 120 பேரில் நான்கு மாற்றுத்திறனாளிகள் உட்பட, 48 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர் சுரேஷ் கூறியதாவது:


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஒவ்வொரு ஆண்டிலும் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் குறித்த பட்டியலை முன்கூட்டியே வெளியிடுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், தேர்வு அறிவிக்கும் வரை காத்திருப்பதில்லை; ஏழு மாதங்கள் முன்பே பயிற்சியை துவக்கி விடுகிறோம்.

கலெக்டர் அலுவலக வளாகத்தின் நான்காவது தளத்தில், பயிற்சி மையம் உள்ளது. பாடத்திட்டங்களை முழுமையாக பயிற்றுவித்து, 15 நாட்கள் இடைவெளியில் மாதிரி தேர்வும் நடத்தி, ஊக்குவிக்கிறோம். தினமும் காலை 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை, பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்றுனர்கள், அந்தந்த பாடங்களில் பயிற்சி அளிக்கின்றனர். பிறகு, மாலை 5:00 மணி வரை, 7வது தளத்தில் உள்ள, பிரத்யேக நுாலகத்தில், போட்டித்தேர்வு பயிற்சி புத்தகங்களை படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் கிறிஸ்துராஜின் சிறப்பு முயற்சியால், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, போட்டித்தேர்வு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன; கடந்த வாரம், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகம் வழங்கப்பட்டது.

மொத்தம், 10 பயிற்றுனர்கள், பயிற்சி அளிக்கின்றனர். கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ.,கள், துணை கலெக்டர் நிலை அலுவலர்கள் மற்றும் புதிதாக அரசு பணிக்கு வருபவர்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, போட்டித்தேர்வர்களுக்கு வழிகாட்டுவது, நல்ல பலனை அளிக்கிறது.
இவ்வாறு, சுரேஷ் கூறினார்.
கலெக்டர் பெருமிதம்


கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், பயிற்சி முகாம் நடத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். போட்டித்தேர்வு எழுதுவோருக்காக, 7வது மாடியில் பிரத்யேக நுாலகம் அமைத்துள்ளோம்.

பயிற்சி பெறும் மாணவ, மாணவியர், கூடுதல் புத்தகம் வேண்டும்' என்று கேட்டனர்; அதற்காகவே, தன்னார்வலர் உதவியுடன் புத்தகங்களை வாங்கி கொடுக்கிறோம். மதி என்ற மகளிர் குழுவினர் நடத்தும் கடையில் இருந்து, டீ , காபி, சிற்றுண்டி வழங்கி வருகிறோம்.

காலை பயிற்சிக்கு வந்ததும், டோக்கன் கொடுக்கப்படும்.அதைக்கொண்டு, கடை களில் டீ, காபி, சிற்றுண்டி சாப்பிட்டுக் கொள்ளலாம். போட்டித்தேர்வுக்கு கடும் பயிற்சி எடுத்து, தேர்வு எழுதியவர்கள் வெற்றி பெற்று, மாவட்டத்துக்குபெருமை தேடி கொடுத்துள்ளனர், என்றார்.

பயிற்றுனர் தமிழி:


தமிழ் மற்றும் கணிதப் பாடத்தில் பயிற்சி அளித்தேன்; தமிழ்ப் பாடத்தில், புத்தகத்தில் இருந்து மட்டுமல்லாது, வெளியே கிடைத்த தகவல்களை கொண்டும் பயிற்சி அளித்தோம். பவர் பாயின்ட் மூலம் பயிற்சி அளிப்பது நல்ல பயன் அளிக்கிறது. ஒவ்வொரு பயிற்சி வகுப்பு முடிந்ததும், அன்றைய தலைப்பில் இருந்து, 30 கேள்விகளுடன் தேர்வு நடத்துவோம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, அனைத்து பாடங்களும் கலந்து, பயிற்சித்தேர்வு நடத்தினோம். தொடர்ச்சியாக, பயிற்சியும், தேர்வும் நடத்தும் போது, படிப்பது மட்டுமல்ல, 200 கேள்விகளுக்கு மூன்று மணி நேரத்தில் பதில் அளிப்பதிலும் பயிற்சி பெற்றுவிட்டனர். சிறப்பான பயிற்சி அளித்ததும், அடிக்கடி தேர்வு நடத்தியதும், போட்டித்தேர்வர்கள் வெற்றிக்கு காரணம்.

பயிற்றுனர் ருத்ரகுமார்:


இந்திய அரசியல் அமைப்பு குறித்து பயிற்சி அளித்தேன்; பள்ளி புத்தக பாடங்களை தாண்டி, பல்கலை புத்தக அளவில் பயிற்சி அளித்தோம். வகுப்பு முடிந்ததும், பழைய கேள்வித்தாள்களை கொண்டு சிறப்பு கலந்தாய்வு நடத்தினோம்; அதைக்கொண்டு, விரிவான கலந்தாய்வு நடத்தினோம். ஒரு கேள்விக்கு, நான்கு பதில் இருக்கும்; முதலில், மூன்று தவறான பதில்களை கண்டறிவது குறித்தும் பயிற்சி அளித்தோம். வேலை வாய்ப்பு அலுவலர், தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறார்.தமிழ்ச் சமுதாயம் மற்றும் கலாசாரம் என்ற பாடத்திலும் பயிற்சி அளித்தோம்.

தனியார் பயிற்சி நிலையத்தில், அதிக கட்டணம் செலுத்த வேண்டும்; இவ்வளவு நேர்த்தியான பயிற்சி கிடைக்குமா என்று தெரியவில்லை. கலெக்டர் அலுவலகத்தில், முழுவதும் இலவசமாக அளித்த பயிற்சி, கைமேல் பலன் கொடுத்துள்ளது.

எப்படி சாதித்தோம்?

மகாலட்சுமி, வெற்றி பெற்ற போட்டித்தேர்வர், திருப்பூர்:



மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், வாரந்தோறும் பயிற்சி தேர்வு நடத்துவார்; மிகவும் கடினமான தேர்வாக இருக்கும். இதுபோன்ற பயிற்சி தேர்வுகள் தான், எங்களை வெற்றி பெற செய்துள்ளது. பயிற்சி முகாமில் கடினமான தேர்வை சந்தித்த எங்களுக்கு, போட்டித்தேர்வு எளிதாக மாறியிருந்தது.

தேவையான அளவு புத்தகங்கள் வைத்துள்ளனர்; பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. எனது லட்சியம், குரூப் -1 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். இரண்டாவது முறையாக, குரூப் -2 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.

கலாதேவி, வெற்றி பெற்ற போட்டித்தேர்வர், சின்னக்கரை:


ஒவ்வொரு பயிற்றுனர்களும், போட்டித்தேர்வர்களின் வெற்றிக்கு சிறப்பு கவனம் செலுத்தினர். அவரவர் திறமைக்கு ஏற்ப, தெளிவாக பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்கினர். தனியார் பயிற்சி நிலையத்தில் கட்டணம் செலுத்தி படித்தால் கூட, இவ்வளவு தெளிவாக பயிற்சி கிடைக்குமா என்று தெரிய வில்லை. பயிற்றுனர்கள் எந்நேரத்தில் கேட்டாலும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். முதன்முதலாக குரூப் 2 ஏ எழுதி, வெற்றி பெற்றுள்ளது பெருமையாக இருக்கிறது.






      Dinamalar
      Follow us