UPDATED : பிப் 11, 2025 12:00 AM
ADDED : பிப் 11, 2025 09:45 AM
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி தமிழ்த்துறை சார்பில், அறிவும் ஆக்கமும் என்ற கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் ஜெரோம் பெர்னாட் வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் பாலசுப்ரமணியம், பல்லடம், அரசு கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஜெய்சிங் முன்னிலை வகித்தனர்.
கோவை, அரசு கலைக்கல்லுாரி இணைப் பேராசிரியர் சேனாவரையன் பேசியதாவது:
தமிழில் பாடலை, வார்த்தைகளை தெளிவாக உச்சரித்து பேசும் போதும், பாடும் போதும் நமக்கு கிடைக்கும் மரியாதையே தனி. உலகின் எந்த நுாலிலும் இல்லாத சிறப்புகளை, பொருள் அதிகாரத்தையும் ஒருங்கே கொண்டிருக்கும் இலக்கண நுால், தொல்காப்பியம். பொருள் இலக்கணத்தில் தான் ஆற்றல் மிக்க செய்திகள் புதைந்து கிடக்கின்றன. மிகப்பெரிய அறிவை ஊட்டுவது தன்னம்பிக்கையும், கல்வியும் மட்டுமே.
எது சரி, எது தவறு என்பதை ஆராய்ந்து பார்க்க கூடிய ஆறாவது அறிவு மனிதருக்கு மட்டுமே உள்ளது; ஆறாவது அறிவை மேம்படுத்த கல்வி உதவுகிறது. 'கசடற கற்பது தான்' கல்விக்கு பொருத்தமாக இருக்கும். தமிழ் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
தமிழ் படித்தவன், படிக்கிறவன் எந்த இடத்திலும் குறைந்து போக மாட்டான். அறிவை வெளிப்படுத்தாத, அறிவார்ந்த செயல்களை செய்யாத போது ஒருவனுக்கு தாழ்வு நிலை வரும். கல்வியை கசடு இல்லாமல் உள்வாங்க வேண்டும்; கற்பதை விடவும், கசடற கற்பது மிக முக்கியம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முனைவர் பட்ட ஆய்வாளர் விஜயராஜ் நன்றி கூறினார். உதவி பேராசி ரியர்கள் செங்கமுத்து, முனைவர் பட்ட ஆய்வாளர்கள் முருகானந்தவள்ளி, கிரிஜா ஒருங்கிணைத்தனர்.