UPDATED : நவ 05, 2025 08:54 AM
ADDED : நவ 05, 2025 08:56 AM
புதுடில்லி:
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தல், நேற்று காலையில் துவங்கி, விறுவிறுப்பாக நடந்தது. தேர்வானவர்கள் பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது.
மொத்தம் 9043 மாணவர்கள் ஓட்டளிக்க ஏதுவாக, நேற்று காலை 9:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மதியம், 1:00 - 2:30 வரை உணவு இடைவேளைக்குப் பிறகு, நேற்று மாலை, 5:30 மணி வரை நடந்தது.
ஓட்டு எண்ணிக்கை நேற்று பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை நேற்று இரவு, 9:00 மணிக்கு துவங்கியது. இறுதியில் தேர்வானவர்கள் பெயர் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளின் பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது.
மத்திய குழு எனும் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலர் மற்றும் இணை செயலர் பதவிகளுக்கு, 20 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த போட்டியில், இடதுசாரி கூட்டணி சார்பில், ஏ.ஐ.எஸ்.ஏ., எனும் அனைத்திந்திய மாணவர் சங்கம்; எஸ்.எப்.ஐ., எனும் இந்திய மாணவர் கூட்டமைப்பு; ஜனநாயக மாணவர் அமைப்பு எனும் டி.எஸ்.எப்., ஆகிய அமைப்புகள் போட்டியிடுகின்றன.
பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், அந்த வசதிகளை மாணவர்கள் பெறும் வாய்ப்பு போன்ற கொள்கைகளின் படி, இடதுசாரி அமைப்புகள் போட்டியிடுகின்றன.
ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு தலைவர் பதவிக்கு அதிதி மிஸ்ரா; துணைத் தலைவராக கிழக்கூட்டம் கோபிகா பாபு; பொதுச்செயலராக சுனில் யாதவ் மற்றும் இணை செயலர் பதவிக்கு டேனிஷ் அலி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு, ஏ.பி.வி.பி., சார்பில் இந்த பதவிகளுக்கு, முறையே, விகாஸ் படேல், தன்யாகுமாரி, ராஜேஷ்வர் காந்த் துபே மற்றும் அனுஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மத்திய குழுவுக்கான போட்டியில், 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த தேர்தலில், ஏ.ஐ.எஸ்.ஏ., சார்பில் தலைவர் பதவியை நிதிஷ்குமார் பெற்றார். ஏ.பி.வி.பி.,யின் வைபவ் மீனா இணை செயலர் பதவியை பெற்றார்.
இதன் மூலம், பாரம்பரியமாக, பல ஆண்டுகளாக டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தேர்தலில், முதல் முறையாக, சங் பரிவார் அமைப்பை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றார்.
அந்த உத்வேகத்தில், இந்த ஆண்டு, ஏ.பி.வி.பி., அமைப்பினர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அதுபோல, முந்தைய ஆண்டில் விட்டுக் கொடுத்து விட்ட, பதவிகளை கைப்பற்ற, இந்த முறை, இடதுசாரி அமைப்பினரும் தீவிர ஓட்டு சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.
நேற்று காலையில் துவங்கிய இந்த தேர்தலுக்கான ஓட்டுப் பதிவில் ஓட்டளிக்க, ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர்.

