75 சதவீத இந்திய மாணவர்களின் கனடா விசா விண்ணப்பம் ரத்து
75 சதவீத இந்திய மாணவர்களின் கனடா விசா விண்ணப்பம் ரத்து
UPDATED : நவ 05, 2025 08:52 AM
ADDED : நவ 05, 2025 08:54 AM

ஒட்டாவா:
நம் நாட்டு மாணவர்களின் 75 சதவீத விசா விண்ணப்பங்களை பல்வேறு காரணங்களை கூறி கடந்த ஆகஸ்டில் வட அமெரிக்க நாடான கனடா நிராகரித்ததாக தகவல் வெளியாகிஉள்ளது.
வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க விரும்பும் நம் நாட்டு மாணவர்களின் விருப்ப தேர்வாக கனடா முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 40 சதவீதம் பேர் இந்தியர்கள்.
கனடாவில் வெளிநாட்டவருக்கு விசா வழங்குவதில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்காலிக குடியேறிகளை குறைப்பதற்கும், மாணவர் விசாவுடன் தொடர்புடைய மோசடிகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கனடா அரசு கூறியது.
கடந்த ஆகஸ்டில், 18,000 இந்திய மாணவர்கள் கனடாவுக்கு விசா விண்ணப்பங்களை தாக்கல் செய்திருந்தனர். அதில் 4,515 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், 20,900 இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
ஆனால், இந்த ஆண்டு, அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. மாணவர்களின் பொருளாதார பின்னணி உள்ளிட்ட காரணங்களால், அதிக அளவில் விசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் சீன மாணவர்களில் 76 சதவீத பேரின் விசா விண்ணப்பங்களை கனடா ஏற்றுள்ளது. 24 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கு கனடா - இந்தியா உறவு மோசமடைந்ததும் முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப் படுகிறது. கடந்த 2023ல் கனடாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார்.
அதற்கு அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நம் நாட்டின் உளவுப்பிரிவு மீது குற்றஞ்சாட்டினார். இதை மத்திய அரசு மறுத்தது. இதனால், இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.

