இசை ஆசிரியர் நியமனம் ரத்து; நெருக்கடிக்கு பணிந்த வங்கதேசம்
இசை ஆசிரியர் நியமனம் ரத்து; நெருக்கடிக்கு பணிந்த வங்கதேசம்
UPDATED : நவ 05, 2025 08:51 AM
ADDED : நவ 05, 2025 08:52 AM
டாக்கா:
வங்கதேசத்தில் முகமது யூனு ஸ் தலைமையிலான இடைக்கால அரசு, தொடக்கப்பள்ளிகளில் இசை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை ரத்து செய்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், இடைக்கால அரசின்தலைவரானார்.
அவரது ஆட்சியில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மதம், கல்வி ஆகியவற்றுடன் கலாசாரக் கல்வியை ஊக்குவிக்கும் திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
அதன்படி, அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் கூறியிருந்தார்.
பள்ளிகளில், இசை, நடனத்தை தொடக்கக் கல்வியில் அறிமுகப்படுத்துவது முஸ்லிம் மதத்துக்கு விரோதமான செயல் என பல முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்தன. அரசின் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டன.
அரசுப் பள்ளிகளில் மத ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், அப்படி இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்துவோம் என்றும் எச்சரித்தனர்.
முஸ்லிம் அமைப்புகளின் தொடர்ச்சியான அழுத்தத்திற்கு பணிந்து, இசை, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை யூனுஸ் அரசு ரத்து செய்துள்ளது.

