நாட்டின் முன்னணி வங்கிகளுடன் என்.எல்.சி., ஒப்பந்தம்
நாட்டின் முன்னணி வங்கிகளுடன் என்.எல்.சி., ஒப்பந்தம்
UPDATED : மார் 06, 2026 10:40 AM
ADDED : மார் 06, 2026 10:42 AM
நெய்வேலி:
முன்னணி வங்கிகளுடன் என்.எல்.சி., இந்தியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
என்.எல்.சி., இந்தியா நிறுவனம், ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது.
என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ஆகியவற்றுடன் தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி தலைமையிலான இயக்குநர்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீர் ஸ்வரூப், வெங்கடாசலம், பிரசன்ன குமார் ஆச்சார்யா, ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், என்.எல்.சி., சார்பில், நிதித்துறை தலைமைப் பொது மேலாளர் தனபால் கையெழுத்திட்டார்.
பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல அலுவலக பொது மேலாளர் சீனிவாச ராவ் முன்னிலையில், துணைப் பொது மேலாளர் ஸ்மிதா நாயர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
இந்தியன் வங்கியின் சார்பில் கள பொது மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் தன்ராஜ் முன்னிலையில் அவ்வங்கியின் புதுச்சேரி மண்டல முதன்மை மேலாளர் ரவிசங்கர் சாஹூ கையெழுத்திட்டனர்.
தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி சார்பாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் ஒப்புதல் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி பேசுகையில், “ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் 'கார்ப்பரேட் சம்பளத் தொகுப்பு' கணக்கு வசதியை விரிவுபடுத்தியதற்காக வங்கிகளுக்கு எனது பாராட்டுக்கள். இந்த முயற்சி நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்துவதுடன், தொழிலாளர்களுக்கு மேம்பட்ட சமூகப் பாதுகாப்பையும், காப்பீட்டு வசதிகளையும் வழங்கும்.
மேலும், தொழிலாளர்கள் மத்தியில் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பலன்கள் அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.

