கணித உபகரணங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிப்பு
கணித உபகரணங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிப்பு
UPDATED : ஆக 02, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பொள்ளாச்சி: துவக்க பள்ளிகளில் செயல்வழி கற்றல் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், கணித உபகரணங்கள் வழங்கப்படாததால் மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்படும் நிலை உள்ளது.
துவக்கப்பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்கும் நோக்கில், செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதில், எழுத்து வடிவில் மட்டுமின்றி உபகரணங்களை கொண்டு கற்பிக்கும் போது, மாணவர்கள் மனதில் எளிதாக பதிவதால், அனைத்து பாடங்களும் அட்டைகள் மூலமாக கற்பிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு படிநிலைகளையும் கடந்து செல்வதை அடிப்படையாக கொண்டு, மாணவர்களின் திறன் கண்டறியப்படுகிறது.
அதன்படி, தமிழ் பாடத்திற்கு விலங்குகள், ஆங்கிலத்திற்கு வாகனங்கள், கணக்குப் பாடத்திற்கு பறவைகள் உட்பட பல்வேறு வண்ண அட்டைகளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
படங்கள், எண்களை அறிமுகம் செய்வது, அதன்மூலம் எழுத்து, எழுத்தின் வரி வடிவம், பெயர்கள், பாடங்கள் மற்றும் வார்த்தைகள் என்று வரிசையாக மாணவர்களுக்கு ஒவ்வொன்றாக கற்பிக்கப்படுகிறது. இதனால், மாணவர்களால் எளிதில் புரிந்து கொண்டு, விரைவில் கற்றுக் கொள்ள முடிகிறது.
அதேவேளையில், கணித உபகரணங்களை பயன்படுத்தி எளிய முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உபகரணங்களை பயன்படுத்தி கூட்டல், கழித்தல் மற்றும் பெருக்கல் உள்ளிட்ட கணக்குகளை எளிதாக செய்யலாம்.
எண் கட்டைகள், தசம எண் முறைகள், ஆணி மணிச்சட்டம், உப்புக் காகித எண் உருக்கள் உட்பட 25 வழிமுறைகளில் கணக்கிட பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதற்காக, ஆசிரியர்களுக்கு பலமுறை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க, இன்னமும் போதிய கணித உபகரணங்கள் வழங்கப்படவில்லை; ஒரு சில பள்ளிகளுக்கு மட்டுமே உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதனால், ஆசிரியர்களுக்கு பலமுறை பயிற்சி அளிக்கப்பட்ட நிலையிலும், மாணவர்களுக்கு சரிவர கற்பிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
“கணித உபகரணங்களுக்கும் உடனடியாக நிதி ஒதுக்கவது கடினமாகும். மேலும், 25 வகையான கணித உபகரணங்கள் அடங்கிய ஒரு ‘செட்‘ தயாரிக்க குறைந்தபட்சமாக ஏழு ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. எனவே, உடனடியாக பள்ளிகளுக்கு உபகரணங்களை வழங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
நடப்பு கல்வியாண்டில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 15 பள்ளிகளுக்கு, உபகரங்கணங்கள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, படிப்படியாக பள்ளிகளுக்கு உபகரணங்கள் வழங்க முயற்சிகள் நடக்கின்றன.
மேலும், குறிப்பிட்ட சில உபகரணங்களை ஆசிரியர்களே அட்டையில் தயாரித்து, மாணவர்களுக்கு கற்பிக்க முன்வர வேண்டும்.” இவ்வாறு, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.