தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘பெற்றோர்களே, மாணவர்களே, ‘டிவி சீரியல்’ பார்க்காதீர்கள்’

‘பெற்றோர்களே, மாணவர்களே, ‘டிவி சீரியல்’ பார்க்காதீர்கள்’

‘பெற்றோர்களே, மாணவர்களே, ‘டிவி சீரியல்’ பார்க்காதீர்கள்’


UPDATED : ஏப் 02, 2011 12:00 AM

ADDED : ஏப் 02, 2011 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 02, 2011 12:00 AM ADDED : ஏப் 02, 2011 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘தினமலர்’ நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம் என்பது குறித்து வழிகாட்டும், ‘வழிகாட்டி’ நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று துவங்கியது.


மாலையில் நடந்த கருத்தரங்கில், ‘மீடியா துறையில், பெருகி வரும் வேலை வாய்ப்புகள்’ குறித்து, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக விரிவுரையாளர் பாலாஜி பேசியதாவது:


மீடியா துறை என்றாலே பெற்றோர் அதை ஏதோ ஒரு மாதிரியாக பார்க்கும் நிலை உள்ளது. அந்நிலை மாற வேண்டும். இந்த துறையில் சேர வரும் மாணவர்கள் தான், பெற்றோரை, ‘கன்வின்ஸ்’ செய்து இப்படிப்பில் சேருகின்றனர். இந்நிலை மாற வேண்டும். பெற்றோர்களும், தங்கள் பிள்ளைகளுக்கு ஆர்வம் இருப்பது தெரிந்தால் இத்துறையில் சேர்க்க வேண்டும்.


மீடியா துறையைத் தேர்ந்தெடுத்த பின், நாம் படிக்கும் கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏதோ ஒரு கல்லூரியில் சேர்ந்து விடாமல், மீடியா துறைக்கு தேவையான அனைத்து அம்சங்களும், வசதிகளும் கல்லூரிகளில் இருக்கிறதா என்பதை நேரடியாக பார்த்து, தெளிந்து அதன் பின் நல்ல கல்லூரியில் சேர வேண்டும். இந்த படிப்பில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளும், பட்டயப் படிப்புகளும் உள்ளன. இன்று அதிக வேலை வாய்ப்புள்ள துறைகளில் ஒன்றாக மீடியா துறை உள்ளது. இதில் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இவ்வாறு பாலாஜி பேசினார்.



தொடர்ந்து, ‘வளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் பயோ டெக், பயோ இன்ஜினியரிங் படிப்பு’ குறித்து, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக பேராசிரியர் முகமது அலி பேசியதாவது:


’பயோ டெக், பயோ இன்ஜினியரிங் படிப்புகளில் சேர, பிளஸ் 2வில் அறிவியல் பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும். அத்துடன் அறிவியல் அறிவும், சாதிக்கும் ஆர்வமும் வேண்டும். இந்த படிப்புகள் நேற்று, இன்று தோன்றியவை அல்ல. கிறிஸ்துவுக்கு 5,000 ஆண்டுகள் முன்பே இவை தோன்றிவிட்டன. எப்போது நாம் தயிர், நெய் ஆகியவற்றை தயார் செய்தோமோ அப்போதே இந்த தொழில்நுட்பம் பயன்படத் துவங்கி விட்டது.


பயோ டெக், பயோ இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு, அவர்களின் படிப்பிற்கும், அனுபவத்திற்கும் ஏற்றார் போல், இந்த படிப்பில் வேலை வாய்ப்பும், அதற்கேற்ற ஊதியமும் கொட்டிக் கிடக்கிறது. மேலை நாடுகளில் அதிக ஆர்வத்துடன் இப்படிப்பு படிக்கப்பட்டு வருகிறது. அது போன்றதொரு நிலை இந்தியாவிலும் வர வேண்டும். இவ்வாறு முகமது அலி பேசினார்.



‘கடல் சார் படிப்புகளைப் படிப்பவர்களுக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்’ குறித்து, இத்துறையில் 30 ஆண்டு கால அனுபவம் பெற்ற நிபுணர் நரசய்யா அறிவுரை வழங்கி பேசியதாவது:


முந்தைய காலத்தில் தமிழர்கள் தான் கப்பல் துறையிலும், கடல் கடந்த வணிகத்திலும் சிறந்து விளங்கினர். ஆங்கிலேயர் ஆட்சியில் வீழ்ச்சியடைந்திருந்த நாம், சுதந்திரத்திற்கு பின் மீண்டும் அத்துறையில் மீண்டும் ஈடுபட ஆரம்பித்தோம். இன்று, கடல் சார்ந்த கப்பல் தொழிலில் இந்தியர்களுக்கு பெரிய அளவில், ‘டிமான்ட்’ இருக்கிறது. இதில், கேப்டன், இன்ஜினியர், மாலுமிகள், பிற பணியாளர்கள் என பல வேலைகளுக்கு ஆட்கள் தேவை அதிகரித்துள்ளது. இன்று ஆயிரம் கப்பல்களை நாம் வைத்திருக்கிறோம்.


கப்பல் சார்ந்த படிப்புகளை சொல்லித் தர தமிழகத்திலும், இந்தியாவிலும் அரசு சார்பிலும், தனியார் சார்பிலும் நிறைய கல்லூரிகள் உள்ளன. இப்படிப்பு முடித்து விட்டு வேலை இன்றி இருப்பவர்கள் என யாரும் இல்லை. அதிக கவுரவத்துடன், அதிக சம்பளத்துடனும் உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு நரசய்யா பேசினார்.



கருத்தரங்கின் இறுதியில், கல்லூரியில் வெற்றியாளராக இருங்கள் என்ற தலைப்பில், இலக்கிய பேச்சாளர், பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசியதாவது:


பிளஸ் 2 முடிக்கும் வரை உங்களை ஆசிரியர்கள் செதுக்குவர். கல்லூரியில் நீங்களே உங்களை செதுக்கிக் கொள்ள வேண்டும். பள்ளியில் உங்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தருவர். கல்லூரியில் விரிவுரையாளர்கள் மட்டுமே இருப்பர். உங்களுக்கு என்ன பிடிக்குமோ, எதில் ஆர்வமோ அந்த படிப்புகளையே தேர்ந்தெடுங்கள்.நீங்


கள் என்ன ஆக வேண்டும் என தீர்மானிக்க வேண்டியது நீங்கள் தான். 17 வயது முதல் 25 வயது வரை நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதையே தான் காலம் முழுவதும் செய்து கொண்டிருப்பீர்கள். இன்ஜினியரிங் ஆக முடிவெடுத்து விட்டால், உங்கள் சிந்தனை முழுவதும் அதிலேயே தான் இருக்க வேண்டும். அப்போது தான், உங்களால் சிறந்த இன்ஜினியர் ஆக முடியும். எதுவுமே ஓர் இரவில் கிடைத்து விடாது.


நம் நாட்டில் ராமாயணம், மகாபாரதம் போன்ற கருத்து கருவூலங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றின் மூலம் நாம் அறிவு பெற வேண்டும். நம்மால் செய்ய முடியாததை, வேறு யாரோ எங்கோ செய்து கொண்டு தான் இருக்கிறார். எதை செய்ய வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது நீங்கள் தான். பெற்றோர்களே, மாணவர்களே, ‘டிவி சீரியல்’ பார்க்காதீர்கள். ‘டிவி’ சீரியல் பார்ப்பதும், அடுத்த வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பதும் ஒன்று தான். ஏன் என்றால், நேரத்தை இழந்தால் அதை திரும்பப் பெற முடியாது. இவ்வாறு பர்வீன் சுல்தானா பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us