UPDATED : ஏப் 12, 2011 12:00 AM
ADDED : ஏப் 12, 2011 05:34 PM
வளம் கொழிக்கும் விளம்பர துறையின் கிளை பிரிவாக "காப்பி ரைட்டிங்' துறை திகழ்கிறது. இப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை "காப்பி ரைட்டர்' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். குறிப்பிட்ட பொருளையோ, சேவையோ, கொள்கை குறித்த தாக்கத்தை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்துவதே காப்பி ரைட்டரின் பணி.
வினோதமான வார்த்தை பயன்பாடு, விசித்திரமான ஓவியங்களை வரைதல் போன்ற ஏதேனும் புதுமையான வழிமுறைகளை, மக்களை ஈர்க்கும் விதத்தில் இவர்கள் உருவாக்க வேண்டும். அதாவது விளம்பரங்களை உருவாக்கும் தேவையான கருவை உருவாக்க வேண்டும். தொலைகாட்சி, வானொலி, இணையதளம், செய்தித்தாள்கள், போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் போன்ற பல வகையான சாதனங்களுக்கு ஏற்ப படைப்புகளை அளிக்க வேண்டும்.
தேவையான தகுதிகள்
சிறந்த தகவல் தொடர்பு திறன், மொழிப்புலமை, எழுத்தாற்றல், கற்பனை வளம், குழுவாக இணைந்து பணியாற்றுவது, வித்தியாசமாக சிந்திக்கும் ஆற்றல் போன்ற தகுதிகள் தேவைப்படுகிறது. கணினி இயக்கத்தில் புலமை பெற்றிருப்பது இன்றைய காலகட்டத்தில் இத்துறைக்கு அவசியமான தகுதியாக கருதப்படுகிறது.
வேலைவாய்ப்புகள்
பல்வேறு விளம்பர நிறுவனங்களில் இவர்கள் பணியாற்ற முடியும். இந்த துறையை பொறுத்தளவில் திறமைசாலிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இத்துறையை சேர்ந்தவர்களுக்கு இந்தியாவிலேயே நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்புகள் கொட்டிகிடக்கின்றன. வெளிநாடுகளிலும் இவர்கள் வேலைவாய்ப்பை பெற முடியும்.
கல்வி நிறுவனங்கள்
* முத்ரா இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன், ஆமதாபாத்
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன், புதுடில்லி
* சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மீடியா மற்றும் கம்யூனிகேஷன், பூனே
* சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன், மும்பை
* ஸ்கூல் ஆப் பிராட்கேஸ்டிங் அண்டு கம்யூனிகேஷன், மும்பை
