மகாகவி பாரதி ஐந்தமிழ் விருதுக்கு 10 பேர் தேர்வு: பாரதியார் பல்கலை
மகாகவி பாரதி ஐந்தமிழ் விருதுக்கு 10 பேர் தேர்வு: பாரதியார் பல்கலை
UPDATED : டிச 03, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: பாரதியார் பல்கலை வழங்கவுள்ள ‘மகாகவி பாரதி ஐந்தமிழ் விருது’க்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது:
கடந்த ஆண்டு பாரதியாரின் 125வது பிறந்தநாளின் போது, பல்கலையில் ‘பாரதியார் ஆராய்ச்சி மையம்’ நிறுவப்பட்டது. இந்த மையம், ஆண்டுதோறும் மகாகவி பாரதி இயற்றமிழ் விருது, இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஊடகத்தமிழ் ஆகிய பிரிவுகளில் விருது வழங்கவுள்ளது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு, தகுதியானவர்களைத் தேர்வு செய்ய பொள்ளாச்சி தொழிலதிபர் மகாலிங்கம் தலைமையில் தமிழ் இணைய பல்கலை துணைவேந்தர் குழந்தைசாமி, சினிமா இயக்குனர் அகத்தியன், பேராசிரியர் சிற்பி பாலசுப்ரமணியம், பேராசிரியர் ராமசாமி, பேராசிரியர் லட்சுமி போத்வால் ஆகியோரை உள்ளடக்கிய வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, 10 பேரை விருதுக்கு தேர்வு செய்துள்ளது. மகாகவி பாரதி இயற்றமிழ் விருதுக்கு 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த மன்னர் மன்னன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 40 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சினிமா பாடலாசிரியர் யுகபாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பிரிவில் சிறப்பு பரிசு புலவர் மணியனுக்கு அளிக்கப்படுகிறது.
மகாகவி பாரதி இசைத்தமிழ் விருதுக்கு பித்துக்குளி முருகதாஸ், நெல்லை வீணை சரஸ்வதி, நாடகத்தமிழ் விருதுக்கு சிதம்பரத்தைச் சேர்ந்த அழகப்பன், காரைக்குடி சோமசுந்தரன், அறிவியல் தமிழ் விருதுக்கு நெல்லை முத்து, ராஜபாளையம் கணேசன், ஊடகத்தமிழ் விருதுக்கு தென்கச்சி சுவாமிநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விருதுடன் பொற்கிழி, 25 ஆயிரம் ரூபாய், கேடயம், பாராட்டு பத்திரம் வழங்கப்படும். டிச., 11ம் தேதி விருது வழங்கும் விழா நடக்கிறது. இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.
