அனைவருக்கும் இடைநிலை கல்வி: தமிழகத்துக்கு ரூ.151.44 கோடி
அனைவருக்கும் இடைநிலை கல்வி: தமிழகத்துக்கு ரூ.151.44 கோடி
UPDATED : டிச 24, 2009 12:00 AM
ADDED : டிச 24, 2009 01:22 PM
அ நிறம் | அளவு
மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் சர்வ சிக்ஷ அபியான் எனப்படும் அனைவருக்கும் துவக்க கல்வி வழங்கும் திட்டம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் மாணவர்கள் இடை நிற்றலை தவிர்க்கவும், கட்டாய இடை நிலை கல்வியை செயல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக ராஷ்டீரிய மத்தியமிக் சிக்ஷ அபியான் என்ற அனைவருக்கும் இடை நிலைக்கல்வி திட்டத்தை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும் வகையில் தமிழகத்துக்கு 151 கோடியே 44 லட்சம் ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2012 வரை மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் நிதி பங்களிப்புடனும், அதன் பிறகு 2017 வரை சம பங்களிப்புடனும் திட்டம் செயல்படுத்தப்படும்.
மாநில அளவில் பள்ளிக்கல்வி இயக்குனரின் தலைமையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் மற்றும் புதிய உயர்நிலைப்பள்ளிகள் துவங்கும் போது, அவற்றிற்கு முழு அளவில் வகுப்பறைகள் உட்பட கட்டட வசதிகள் செய்ய ஒரு பள்ளிக்கு 58 லட்சத்து 12 ஆயிரம் வரை நிதி வழங்கப்பட உள்ளது.
இது தவிர தற்போதுள்ள உயர்நிலைபள்ளிகளில் பெரிய அளவிலான பழுதுகளை சரிபார்க்க இரண்டு வகுப்பறைக்கு தலா இரண்டு லட்சம் வரையும், நான்கு வகுப்பறைகள் இருந்தால் நான்கு லட்சம் ரூபாய் வரையிலும் நிதி ஒதுக்கப்பட உள்ளது. இதற்கான கணக்கெடுப்புகள் தற்போது நடந்து வருகின்றன.
