வன உயிரினங்களை பாதுகாக்க 20,000 மாணவர்களுக்கு பயிற்சி
வன உயிரினங்களை பாதுகாக்க 20,000 மாணவர்களுக்கு பயிற்சி
UPDATED : ஜூன் 09, 2025 12:00 AM
ADDED : ஜூன் 09, 2025 11:12 AM

சென்னை:
வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பாக, 20,000 மாணவர்களுக்கு 3 கோடி ரூபாய் செலவில் குறுகிய கால சான்றிதழ் பயிற்சி அளிக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வனத்துறை சார்பில், வன உயிரினங்கள் பாதுகாப்பு, காட்டுத்தீ தடுப்பு, மனித - வன உயிரின மோதல் தடுப்பு என, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதில், ஏற்கனவே உள்ள வனத்துறை களப்பணியாளர்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை. எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்களை தயார்படுத்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் பசுமை பாதுகாப்புக்காக, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், தேசிய பசுமை படை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதில், இணையும் மாணவர்கள், மரம் நடும் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.
அடுத்தகட்டமாக, வன உயிரினங்கள் பாதுகாப்பு மற்றும் கணக்கெடுப்பு, காட்டுத்தீ மேலாண்மை, மனித - வன உயிரின மோதல் தடுப்பு போன்ற பணிகளுக்கும், மாணவர்களை தயார்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.
இதற்காக, 20,000 மாணவர்களுக்கு குறுகியகால பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு, இளம் இயற்கை காவலர்கள் என, சான்றிதழ் அளிக்கப்படும்.
இத்திட்டத்துக்காக தமிழக அரசு, 3 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. பயிற்சி பெறும் மாணவர்கள், தங்கள் படிப்பை முடிக்கும் நிலையில், வனத்துறையில் பல்வேறு நிலை பணிகளுக்கு, தங்களை தயார்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.