புத்தகத்திருவிழா மார்ச் 23 துவக்கம் லோகோ வெளியிட்டார் கலெக்டர்
புத்தகத்திருவிழா மார்ச் 23 துவக்கம் லோகோ வெளியிட்டார் கலெக்டர்
UPDATED : மார் 19, 2025 12:00 AM
ADDED : மார் 19, 2025 09:36 AM

தேனி :
தேனியில் மார்ச் 23ல் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவிற்கான 'வாசிப்போம் வான்தொடுவோம்' என்ற லோகோ வை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வெளியிட்டார்.
மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தேனி மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா மார்ச் 23ல் துவங்குகிறது.
மார்ச் 30 வரை 8 நாட்கள் நடக்கும் இத் திருவிழா தேனி கம்பம் ரோடு பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள மேனகா மில் மைதானத்தில் நடத்தப்படுகிறது. அங்கு புத்தக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புத்தக திருவிழாவிற்காக வாசிப்போம் வான்தொடுவோம் இலச்சினை (லோகோ) வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கலெக்டர் புதிய லோகோவை வெளியிட்டார். எஸ்.பி., சிவபிரசாத் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, திட்ட இயக்குனர் அபிதாஹனீப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொதுமுத்துமாதவன் பங்கேற்றனர்.
கலெக்டர் பேசியதாவது:
தினமும் புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்களின் சிறப்புரைகளும், பள்ளிக் கல்லுாரி மாணவர்கள், நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
புதிய தகவல்களை அறிந்து கொள்ள அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
புத்தகத் திருவிழாவில் மார்ச் 23 ஞாயிறன்று பேராசிரியர் பர்வீன்சுல்தானா, 24ல் கவிஞர் மனுஷ்யபுத்திரன், 25ல் நகைச்சுவை பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம், மார்ச் 26ல் எழுத்தாளர் ஓசை காளிதாசன், 27 ல் கவிஞர் நெல்லை ஜெயந்தா, 28 ல் மதிமாறன், 29ல் ஊடகவியலாளர் குணசேகரன், 30ல் பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.