தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.டி., மருத்துவ கல்லூரி மாணவர்கள் 30 நாள் போராடியும் பலன் இல்லை

டி.டி., மருத்துவ கல்லூரி மாணவர்கள் 30 நாள் போராடியும் பலன் இல்லை

டி.டி., மருத்துவ கல்லூரி மாணவர்கள் 30 நாள் போராடியும் பலன் இல்லை


UPDATED : செப் 20, 2013 12:00 AM

ADDED : செப் 20, 2013 08:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2013 12:00 AM ADDED : செப் 20, 2013 08:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பணத்தையும், படிப்பையும் தொலைத்து விட்டு, தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள, திருவள்ளூர், டி.டி., மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம், நேற்று, 30வது நாளை எட்டியது. எனினும் அவர்களது எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி நீடிக்கிறது.

மதிப்பெண் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மருத்துவமும், பொறியியலும், பணம் இருந்தால் படிக்கலாம் என்ற நிலையை, தமிழகத்தில் சில தனியார் கல்லூரிகள் ஏற்படுத்தி விட்டன. அப்படி நன்கொடைக்காகவே நடத்தப்படும் கல்லூரிகளில் ஒன்று, திருவள்ளூர், டி.டி., மருத்துவக் கல்லூரி.

கடந்த, 2010-11ல் இக்கல்லூரியை தொடங்குவதற்காக, இந்திய மருத்துவக் கவுன்சிலிடம், கல்லூரி நிர்வாகம் அனுமதி பெற்றது. அதன்படி, முதல் ஆண்டில், 100 பேர் சேர்க்கப்பட்டனர். இரண்டாவது ஆண்டு சேர்க்கைக்கு முன்னர், முறைப்படி இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் (எம்.சி.ஐ.,) விண்ணப்பித்து, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

அப்படி விண்ணப்பித்த போது, எம்.சி.ஐ., விதிமுறைகள்படி, கல்லூரி செயல்படவில்லை எனக் காரணம் கூறி, அங்கீகாரம் தர கவுன்சில் மறுத்து விட்டது. அதை உதாசீனப்படுத்திய கல்லூரி நிர்வாகம், அடுத்த ஆண்டிலும் மாணவர் சேர்க்கை நடத்தியது. முதல் ஆண்டைப் போலவே, 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் லட்சக்கணக்கில் நன்கொடை பெறப்பட்டது.

அதோடும் நிற்கவில்லை; மூன்றாவது ஆண்டும் வழக்கம்போல் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்தது டி.டி. நாயுடு கல்லூரி நிர்வாகம். இதற்கிடையில், தேர்வு பிரச்னை வெடித்தது. "டி.டி., மருத்துவக் கல்லூரி, எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை" என, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை பகிரங்கமாக அறிவித்தது. கல்லூரியும் இழுத்து மூடப்பட்டது.

ஆனாலும், அரசின் முயற்சியால், 2010-11ம் ஆண்டில் சேர்ந்த மாணவர்கள், இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கு பயிற்சி பெறும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், விவரம் தெரியாமல் சேர்ந்த மற்ற மாணவர்களின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது. "அரசு கல்லூரிகளில் சேர்க்க வேண்டும்" என அவர்கள் போராடி வருகின்றனர்.

இக்கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த, 72 பேர், தமிழக அரசு மாற்று நடவடிக்கைகள் எடுக்கக்கோரி, சென்னை, கிண்டியில் உள்ள, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், கடந்த மாதம், 21ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன், பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது போராட்டம் நேற்று, 30வது நாளை தொட்டது. ஆனாலும், அவர்களது எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியும் சந்தேகமும் நீடிக்கிறது. இவ்விஷயத்தில் மாணவர்களின் நலன் கருதி, எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதுதான் போராட்டக் களத்தில் உள்ள மாணவர்களின் ஒட்டுமொத்த ஆதங்கம்.

"முறைகேடுக்கு காரணமான, கல்லூரி அதிபரை, குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் தள்ளினால் மட்டும் போதுமா? டாக்டராகும் ஆசையில் பணத்தையும், படிப்பையும் இழந்து நிற்கும் எங்களுக்கு என்ன பதில், படிப்பை தொடர என்ன வழி?" என்று குமுறுகின்றனர் மாணவர்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக, கோட்டையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடக்கிறது. சுகாதாரத் துறை அமைச்சர் வீரமணி, உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் துறை செயலர்கள் கலந்து கொள்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் மற்றும் அவர்களது பெற்றோர்களும் இன்றையக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களின், 30 நாள் போராட்டத்திற்கு தீர்வு காணப்படலாம் எனத் தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us