‘சமுதாயத்தை மேம்படுத்த நாடு முழுவதும் 3,000 சமுதாய வானொலி’
‘சமுதாயத்தை மேம்படுத்த நாடு முழுவதும் 3,000 சமுதாய வானொலி’
UPDATED : ஆக 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: ஜி.ஆர்.டி., அறிவியல் கல்லூரியில், ‘கல்வி ஊடகத்தின் வளர்ச்சிகள்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
இதில் புதுடில்லி இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலையின்(இக்னோ) மின்னணு ஊடக உற்பத்தி மைய துணை இயக்குனர் ஓம் பிரகாஷ் தேவால் பேசியதாவது:
அச்சு ஊடகம், மின்னணு ஊடகம், இணையத்தளம், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் ஏராளமான மாற்றங்களை சந்தித்து வருகின்றன.
விரைவில் நாடு முழுவதும் 3,000 சமுதாய வானொலி நிலையம் நிறுவப்படவுள்ளது. இந்த வானொலி, மக்களிடையே மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவற்றை 10 கி.மீ., முதல் 15 கி.மீ., சுற்றளவில் உள்ள பொதுமக்கள் கேட்க முடியும். இந்த வானொலியில் ஒரு மணி நேரத்துக்கு ஐந்து நிமிடம் மட்டும் வணிக ரீதியான விளம்பரங்களை ஒலிபரப்பிக் கொள்ள முடியும்.
ஊடகங்களில் மிக சக்தி வாய்ந்ததாக இணையத்தளம் உருவெடுத்துள்ளது. ஆனால், இந்த ஊடகத்தால் சமுதாயத்துக்கு மிரட்டலும் விடப்படுகிறது. எண்ணிக்கை அளவிலும், தரத்திலும் ஊடகங்களின் வளர்ச்சி நன்றாகவே இருக்கிறது.
இன்றைய சூழலில் கல்வி நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஊடகங்களும் அதிகளவில் உள்ளன. இஸ்ரோ, பல்கலை மானியக்குழு, பல்வேறு பல்கலைக்கழங்கள் கல்விக்கான நிகழ்ச்சிகளை வழங்க தனி ஊடகங்களை வைத்துள்ளன.
மின்னணு ஊடகங்களிடையே ஏற்பட்டுள்ள கடும் போட்டியால், பல ஊடகங்கள் வன்முறை காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து மீண்டும், மீண்டும் ஒளிபரப்புகின்றன.
அந்த ஊடகங்கள் 24 மணி நேரத்தை பூர்த்தி செய்வதற்காகவும் அதே காட்சியை மீண்டும் ஒளிபரப்புகின்றன. எந்தெந்த ஊடகத்தை தேர்வு செய்து பார்ப்பது என்பது பார்வையாளர்கள் கையில் மட்டுமே இருக்கிறது. இவ்வாறு ஓம் பிரகாஷ் தேவால் பேசினார்.

