அரசு துவக்கப் பள்ளிகளில் தற்காலிகமாக 4,000 ஆசிரியர்கள் நியமனம்
அரசு துவக்கப் பள்ளிகளில் தற்காலிகமாக 4,000 ஆசிரியர்கள் நியமனம்
UPDATED : டிச 02, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பல ஆண்டுகளாக, மாவட்ட சீனியாரிட்டி அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களை மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ஒப்புக்கொண்டாலும், உடனடியாக ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலை இருக்கிறது.
மாநில சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணி முடிந்து, இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய இன்னும் மூன்று, நான்கு மாதங்கள் தேவைப்படும். அதற்குள், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், குறிப்பாக கிராமப்புற பள்ளிகளில், படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை தடுத்து நிறுத்தும் வகையிலும், தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள துவக்கப் பள்ளிகளில், 4,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக எஸ்.எஸ்.ஏ., கண்டறிந்துள்ளது. அந்த பணியிடங்களில், வரும் மார்ச் வரை தற்காலிகமாக, பணியாற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
பட்டதாரி முதல் குறைந்தபட்சம் பிளஸ் 2 வரை படித்த உள்ளூர் இளைஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு 1000 ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது. இதுவரை 3,200 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 800 ஆசிரியர்களும் ஓரிரு வாரங்களுக்குள் நியமிக்கப்பட்டு விடுவர். முறையான பணி நியமனம் நடைபெறும் வரை இவர்கள் பணியில் இருப்பர் என்றும், ரெகுலர் ஆசிரியர்கள் வந்தவுடன் இவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர் என்றும் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
