கி.கிரியில் நீட் தேர்வு எழுதும் 4,755 மாணவ, மாணவியர்
கி.கிரியில் நீட் தேர்வு எழுதும் 4,755 மாணவ, மாணவியர்
UPDATED : ஏப் 29, 2026 05:49 PM
ADDED : ஏப் 29, 2026 05:50 PM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும், 3ல், 11 மையங்களில் நடக்கும், 'நீட்' தேர்வை, 4,755 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026 ஆண்டிற்கான, 'நீட்' தேர்வு 11 தேர்வு மையங்களில் வரும் மே, 3ல், (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இத்தேர்வை எழுத, 4,755 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர், தேர்வு மையங்களுக்கு செல்ல வசதியாக, அன்று காலையும், தேர்வு முடிந்து திரும்ப வசதியாக மாலையும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம், குடிநீர், இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் தடையின்றி தேர்வு எழுத, சக்கர நாற்காலி உள்பட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே, தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். முறைகேடுகளை தவிர்க்க, தேர்வு மையங்களில் மொபைல் ஜாமர்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள், நெரிசலின்றி தேர்வு மையங்களுக்கு வந்து, செல்ல ஏதுவாக, போலீசார் மூலம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும். அவசர மருத்துவ தேவைகளுக்காக ஆம்புலன்சு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
