திண்டுக்கல்லில் தேசிய திறனாய்வு தேர்வு: 5286 மாணவர்கள் எழுதினர்
திண்டுக்கல்லில் தேசிய திறனாய்வு தேர்வு: 5286 மாணவர்கள் எழுதினர்
UPDATED : ஜன 11, 2026 02:05 PM
ADDED : ஜன 11, 2026 02:10 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு 21 மையங்களில் நடந்த நிலையில் இதை 5286 மாணவர்கள் எழுதினர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுத்து தொடர்ந்து படிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதன்படி 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறன்படிப்பு உதவித்திட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 படித்து முடிக்கும் வரை தொடர்ச்சியாக 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 4 ஆண்டுகளில் ஒரு மாணவருக்கு ரூ.48 ஆயிரம் கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
இத்தேர்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் என 420 பள்ளிகளை சேர்ந்த 5486 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 13 பழநி கல்வி மாவட்டத்தில் 8 என 21 மையங்கள் அமைக்கப்பட்டன. நேற்று காலை 9:30 மணிக்கு தேர்வு துவங்கிய நிலையில் காலை 9:30 மணி முதல் 11 :00 மணி வரை மனத்திறன் தேர்வு, 11:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை படிப்பறிவு திறன் தேர்வும் நடந்தது. மாவட்டம் முழுவதும் 5286 பேர் எழுதினர். இதில் 200 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

