சமூக சேவை மற்றும் கல்விப்பணிக்கு பாராட்டு விருதை ஆசிரியருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்
சமூக சேவை மற்றும் கல்விப்பணிக்கு பாராட்டு விருதை ஆசிரியருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்
UPDATED : ஜன 11, 2026 02:04 PM
ADDED : ஜன 11, 2026 02:05 PM

விருத்தாசலம்: சமூக சேவை மற்றும் கல்விப்பணியை பாராட்டி, விருத்தாசலம் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில், சர்வதேச தமிழ் பண்பாட்டு பல்கலைக்கழகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் (கணிதம்) கிருஷ்ணமூர்த்தியின், சமூக சேவை மற்றும் கல்விப் பணியை பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கடேசன், நடிகர் சின்னி ஜெயந்த் ஆகியோர் டாக்டர் பட்டம் வழங்கி, வாழ்த்தினர்.
இது குறித்து ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
எனது தாய், தந்தை எழுத படிக்க தெரியாதவர்கள். குக்கிராமத்தில் பிறந்து, எனது பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை முடித்தேன்.
கடந்த, 1991ல் விருத்தாசலம், அதனை சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள் பலர், 10ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்து, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கூலி வேலைக்கு செல்வதை பார்த்து மனம் வருந்தினேன். இதனை தடுக்கும் வகையில், கிராமங்கள் தோறும் நேரில் சென்று, ஏழை மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மாத்துார், ஆலடி கிராமங்களில் சிறப்பு வகுப்பு நடத்தி, அனைவரையும் தேர்ச்சி பெற செய்தேன்.
அவர்களும் ஆர்வமுடன் படித்து, தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை கொடுத்தது. அதன்பின், தன்னம்பிக்கையோடு விடா முயற்சியுடன், அவர்கள் வாழ்க்கையில் மேம்பட பல அறிவுரைகளை கூறினேன்.
எனது விடாமுயற்சியால் கிராமப்புற மாணவர்கள் பலர் தேர்ச்சியடைந்து, இன்று அரசு பணிகளில் இருப்பது, மகிழ்ச்சியை தருகிறது.
கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மிக எளிய முறையில் மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் நடத்துவேன். ஒழுக்கம், பணிவு, தன்னம்பிக்கையை என்னிடம் பயின்ற மாணவர்களிடம் புரிந்து கொள்ள முடியும்.
எனது மாணவர்கள் சென்னை நந்தனம் அரசு கல்லுாரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., உட்பட பல கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகவும் பணிபுரிகின்றனர். பலர் டாக்டர்களாக, பொறியாளர்களாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சாதித்து வருகின்றனர்.
நுாற்றாண்டு கண்ட விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறுகின்றனர். எனது எண்ணமும், செயல்பாடும் ஏழை மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது மட்டுமே உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

