கல்லுாரிகளில் பொங்கலோ பொங்கல்! குலவையிட்டு, கும்மியடித்து
கல்லுாரிகளில் பொங்கலோ பொங்கல்! குலவையிட்டு, கும்மியடித்து
UPDATED : ஜன 11, 2026 02:01 PM
ADDED : ஜன 11, 2026 02:04 PM

பாரம்பரிய விளையாட்டு நவ இந்தியா, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து, சமத்துவ பொங்கல் விழாவை நேற்று, வளாகத்தில் கொண்டாடினர்.
பாரம்பரிய உடையில், மாணவர்கள், பேராசிரியர் இணைந்து பொங்கல் வைத்தனர். குலவையிட்டு, கும்மியடித்து முளைப்பாரி எடுத்து வந்து கடவுளுக்கு படைத்து பொங்கல் வைத்தனர். 'பொங்கலோ பொங்கல்' என கோரசாக பாடியபடியே கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. கயிறு இழுத்தல், இசை நாற்காலி, உறியடித்தல், தாயம் விளையாடுதல், நொண்டி அடித்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், பலுான் ஊதி உடைத்தல் போன்றவை மாணவர்கள், பேராசிரியர்களுக்கு தனித்தனியாக நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. இறுதியாக, 20 நிமிடங்கள் மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், கல்லுாரி செயலர் சரஸ்வதி, நிர்வாக செயலர் பிரியா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழா கோலமான வளாகம் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியில், தமிழர் திருநாளாம் பொங்கல் விழா, நேற்று கொண்டாடப்பட்டது.
வளாகம் முழுக்க, வண்ணக்கோலம், வாழை மரங்கள், கரும்பு, மண் பானை, மாட்டுவண்டி அலங்காரங்களால் அழகுப்படுத்தியதால், திருவிழா போல காட்சியளித்தது. விழாவில், பொங்கல் வைத்து படையலிடப்பட்டது. கல்லுாரி நிறுவனர் பழனிசாமி, துணைத்தலைவர் இந்து, முதன்மை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ்காந்தி, முதல்வர் ராமசாமி மற்றும் கண்ணம்பாளையம், பள்ளப்பாளையம் பேரூராட்சி தலைவர்கள் முறையே புஷ்பலதா, செல்வராஜ், கவுன்சிலர் சரண்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஐந்திணை பொங்கல் ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியில், ஐந்திணை என்ற தலைப்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், குறிஞ்சி, முல்லை, மருதம் என ஐந்து வகை நிலங்களில் பொங்கல் எப்படி கொண்டாடப்படுகிறது என, கலாசார, பாரம்பரிய பின்னணியுடன் விளக்கப்பட்டது. வள்ளிகும்மி, மயிலாட்டம், பொய்க்கால்குதிரை என, பாரம்பரிய நாட்டுப்புற நடனங்களை ஆடி மாணவர்கள் அசத்தினர். கோலப்போட்டி, உறியடி, கயிறு இழுத்தல், முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது.
நெல்லும் கரும்பும் நவக்கரை, ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லுாரியில், நெல்லும், கரும்பும் என்ற தலைப்பில், பாரம்பரிய இசையுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், பறையாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பூக்காவடி, ஜிக்காட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, மாட்டுவண்டியில் நாட்டுப்புற நடனம் என, பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா துவங்கியது. கல்லுாரி வளாகம் முழுக்க வண்ணத்தோரணங்கள், ரங்கோலி கோலங்களால் அலங்கரிக்கப்பட்டது. மாணவர்கள், பேராசிரியர்களுக்கு, அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. கல்லுாரி செயலர் அஜித்குமார் லால் மோகன், பொங்கல் விழா கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
முளைப்பாரியுடன் ஊர்வலம் சங்கரா அறிவியல், வணிகவியல் கல்லுாரியில், நாதஸ்வரம், மேளதாள இசையுடன், முளைப்பாரி, மாவிளக்கு, கலசத்துடன் மாணவர்கள் ஊர்வலமாக சென்று, பொங்கல் விழாவை கொண்டாடினர்.
கயிறு இழுத்தல், உறியடித்தல், டி.ஜே., மாட்டுவண்டி சவாரி போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், சிலம்பம், வள்ளிக்கும்மி போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சங்கரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் ராமச்சந்திரன் தலைமையேற்றார். இணை செயலர் சந்தியா, துணை இணை செயலர் நித்யா, அறங்காவலர்கள் ஆர்த்தி, பட்டாபிராமன், முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னாட் எட்வர்டு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

