UPDATED : மே 18, 2011 12:00 AM
ADDED : மே 18, 2011 12:21 PM
வரும் கல்வி ஆண்டில் இருந்து 1 முதல் 10ம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்படும் சமச்சீர் கல்வி முறையில் உருவாக்கப்பட்டுள்ள புத்தகங்கள் மாணவர்களை அதிகம் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
புத்தகங்கள் என்றாலே வெறுப்போடு அணுகும் குழந்தைகளின் மனநிலையை மாற்றும் வகையில் இந்த புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பக்கத்திற்கு பக்கம் வெறும் எழுத்துக்களையே கொண்டிருக்கும் பாடங்களைப் படிப்பதால் மாணவர்களுக்கு சிந்தனைத் திறன் வளருமா என்பது கேள்விக்குறியே.
ஒரு விஷயத்தை கண்களால் பார்த்து புரிந்து கொள்வதை விட, படித்து புரிந்து கொள்வது சற்று கடினமானதுதான். எனவே. சமச்சீர் கல்வி புத்தகத்தில் எழுத்துக்களை விட, அதிகமான ஓவியங்கள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாம் சிறு வயதில் படித்த பல கதைகளையும், பாடல்களையும் மறந்திருப்போம், ஆனால், நம் புத்தகத்தில் ஓவியத்தோடு வந்த கதைகளை யாராவது சொன்னால் கூட, அந்த ஓவியம் நம் கண் முன் வந்து செல்வதை யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவிற்கு ஓவியங்கள் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன. மனுநீதிச் சோழனின் ஓவியம், தங்கக் கோடாரிக் கதையின் ஓவியம் இன்றும் நம் கண் முன் நிற்கின்றன.
அந்த வகையில் 1 முதல் 5 வகுப்பு வரை புத்தகங்கள் தான் பெரும்பாலும் இதுபோன்ற ஓவியங்களோடு வெளியாகும். ஆனால் தற்பாது சமச்சீர் கல்வி முறையில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் ஓவியங்களோடு வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு பாடத்திற்கும் தொடர்புடைய படங்கள், வரைபடங்கள், கிராப்ட்ஸ் போன்றவை இடம்பெற்றுள்ளன. இனி எந்த பாடத்தைப் படித்தாலும், அது தொடர்பான காட்சிகள் அவர்கள் மனக்கண்ணில் ஓடும். இதனால் படித்த விஷயங்கள் ஆழமாக பதியும்.
புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களை கவரும் வகையில் தயாரித்திருப்பதே நல்ல விஷயம் என்று கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
