UPDATED : மே 24, 2011 12:00 AM
ADDED : மே 24, 2011 10:22 AM
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., மேல்நிலைப்பள்ளி மாணவியர், அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவியர், அவர்களின் பெற்றோர், தினமலரின் கல்விப் பணியை பெரிதும் பாராட்டினர்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளி மாணவி கே.அபிநயா, ஆங்கிலத்தில் 94, கணிதத்தில் 100, இயற்பியலில் 99, உயிரியலில் 99, வேதியியலில் 97 மதிப்பெண்கள் என, மொத்தம், 489 மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, "நான் தனியாக டியூஷன் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. டிவி, சினிமா பார்த்து நேரத்தை வீணடிப்பதில்லை. பெற்றோர், ஆசிரியர்கள் எனக்கு உதவியாக இருந்தனர். நான் ஏற்கனவே பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளேன். எதிர்காலத்தில் டாக்டராகி சேவை செய்வேன்" என்றார்.
இதே பள்ளி மாணவி எம்.வைஷாலி, ஆங்கிலத்தில் 91, பொருளாதாரத்தில் 97, கணக்கு பதிவியலில் 97, கணிதத்தில் 99, வர்த்தக பாடத்தில் 99 என, மொத்தம், 483 மதிப்பெண்கள் பெற்று, வர்த்தக பாடப்பிரிவில் சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, "நான் எல்.கே.ஜி., முதல், இதே பள்ளியில் படித்து வருகிறேன். என் தந்தை கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். பொது அறிவை வளர்த்துக் கொள்ள நாளிதழ்களை படிப்பேன். என் வெற்றிக்கு பள்ளிதான் முக்கிய காரணம்" என்றார்.
வெற்றி பெற்ற இரு மாணவியர், அவர்களின் பெற்றோர், "தினமலர் ஆற்றி வரும் கல்விப் பணி பெரும் பாராட்டிற்குரியது. ஜெயித்துக் காட்டுவோம், வழிகாட்டி போன்ற நிகழ்ச்சிகள் எங்களுக்கு பேருதவியாக இருக்கின்றன. இப்போது கூட, தினமலரில் வெளியான கட் - ஆப் மார்க் பட்டியலைத்தான் பையில் வைத்துள்ளோம்" என்றனர்.
