UPDATED : மே 28, 2011 12:00 AM
ADDED : மே 28, 2011 05:21 PM
எவ்வித உடல் குறைபாடும் இல்லாத பிளஸ் 2 மாணவர் ஒருவரை, உடல் ஊனமுற்ற மாணவர் என்றும், அதற்கான சலுகைகளை தேர்வில் பெற்றார் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர், நேற்று தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.
நெய்வேலி செயின்ட் பவுல்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.அருண்குமார். பிளஸ் 2 மாணவரான இவர், பொதுத்தேர்வில் 997 மதிப்பெண்கள் பெற்றார். கடந்த 25ம் தேதி மதிப்பெண் பட்டியலை வாங்கிய அருண்குமார், மதிப்பெண் பட்டியலின் பின்பக்கத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அருண்குமார் உடல் ஊனமுற்றவர் என்றும், அவர் தேர்வெழுத கூடுதலாக ஒரு மணி நேர சலுகையை பெற்றார் என்றும் குறிப்பிட்டு, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பதை அறிந்து, மாணவரின் பெற்றோர், நேற்று தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
அருண்குமார் உடல் ஊனமுற்றவர் அல்ல என்று, பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிதத்தை பெற்று, தேர்வுத் துறையிடம் கொடுத்தனர். இந்த மாணவருக்கு, வேறு மதிப்பெண் பட்டியல் விரைவில் வழங்கப்படும் என தெரிகிறது.
